பல்லாவரம், கீழ்கட்டளை ஏரிகளில் புனரமைப்பு பணிகள் நகராட்சிக்கு பொதுப்பணித்துறை தடை இல்லா சான்று வழங்கியது


பல்லாவரம், கீழ்கட்டளை ஏரிகளில் புனரமைப்பு பணிகள் நகராட்சிக்கு பொதுப்பணித்துறை தடை இல்லா சான்று வழங்கியது
x
தினத்தந்தி 14 Sept 2017 4:45 AM IST (Updated: 14 Sept 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

பல்லாவரம் பெரிய ஏரி, கீழ்கட்டளை ஏரிகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள பல்லாவரம் நகராட்சிக்கு பொதுப்பணித்துறை தடை இல்லா சான்று வழங்கி உள்ளது. இதையடுத்து ரூ.14 கோடியே 65 லட்சத்தில் இரு ஏரிகளும் புனரமைக்கப்பட உள்ளது.

தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரத்தின் முக்கிய நீர் ஆதார ஏரியான பல்லாவரம் பெரிய ஏரியில், குப்பைகள் கொட்டப்பட்டு ஏரி நீர் மாசடைந்து காணப்படுகிறது. இதனால் குரோம்பேட்டை ராதாநகர், கணபதிபுரம், ஜமீன்ராயப்பேட்டை உள்ளிட்ட பல குடியிருப்பு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

ஏரியில் கொட்டப்பட்ட குப்பைகள் மலை போல தேங்கி உள்ளதால் அப்பகுதியில் கடுமையாக துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடாகவும் அமைந்து உள்ளது.

பொதுபணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்லாவரம் பெரிய ஏரி மற்றும் ரேடியல் சாலையில் உள்ள மற்றொரு ஏரியான கீழ்கட்டளை ஏரி ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்தநிலையில், 2 ஏரிகளையும் விரைந்து சீரமைக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்ட நிதியில் ரூ.14 கோடியே 65 லட்சத்தில் பல்லாவரம் பெரிய ஏரி மற்றும் கீழ்கட்டளை ஏரிகளை பல்லாவரம் நகராட்சி புனரமைக்க பொதுபணித்துறையினர் தடை இல்லா சான்று வழங்கி உள்ளனர்.

பல்லாவரம் பெரிய ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நகராட்சி மூலம் ரூ.2 கோடியே 80 லட்சத்தில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு உள்ளது. ரூ.11 கோடியே 85 லட்சம் செலவில் பல்லாவரம் பெரிய ஏரி மற்றும் கீழ்கட்டளை ஏரிகளை பொதுபணித்துறை மூலம் தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி மதகுகள் அமைக்கவும் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு உள்ளது.

இந்த பணிகள் மூலம் 2 ஏரிகளிலும் மழை நீர் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீர் ஆதாரம் உயர்த்தப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. நகராட்சி நிர்வாக துறை இந்த நிதியை 60 சதவீதம் கடனாகவும், 30 சதவீதம் மானியமாகவும், 10 சதவீதம் நகராட்சி பங்களிப்பு தொகையாகவும் செலுத்தி பணிகளை செய்கிறது.

இந்த பணிகளை செய்ய பல்லாவரம் நகராட்சிக்கு பொது பணித்துறையினர் சில நிபந்தனைகளை விதித்து உள்ளனர். அதாவது, 2 ஏரிகளையும் தூர்வாரி, கரைகளை நீரியல் தன்மை மாறாமல் பலப்படுத்த வேண்டும். ஏரிகளின் நீர் பரப்பு பகுதிகளை வருவாய் துறையின் நில அளவயரை கொண்டு நில அளவை வரைபடத்தில் உள்ளவாறு எல்லை நிர்ணயம் செய்து, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, எல்லை நிர்ணயம் செய்த பகுதியில் சுற்று சுவர் அல்லது சுற்றுவேலி அமைக்க வேண்டும்.

நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் ஏரிகளுக்குள் வருவதற்கு ஏதுவாக திருகுமுறை கதவுகளுடன் கூடிய உள்வாங்கிகள் அமைக்கப்படவேண்டும். ஏரிகளின் நீர்பரப்பு பகுதிகளில் சுத்திகரிப்பு நிலையம், கட்டுமான பணிகள் செய்யக்கூடாது. கழிவு நீர் ஏரிகளில் செல்ல அனுமதிக்க கூடாது.

பருவ மழை காலங்களில் வெள்ள நீர் கடந்து செல்ல வழிவகை செய்தல் என்பது உள்ளிட்ட வெள்ள மேலாண்மை பணிகளை பொதுபணித்துறை மட்டுமே செய்யும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த பணிகள் குறித்து பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:–

பல்லாவரம் பெரிய ஏரி மற்றும் கீழ்கட்டளை ஏரி தூர்வாரப்பட்டு மதகுகள் சீரமைக்கப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்படும். பல்லாவரம் பெரிய ஏரிக்கு கழிவு நீர் வரும் 4 வழிகளிலும் ஏரிக்கு கழிவு நீர் வராமல் தடுக்கப்பட்டு பாதாள சாக்கடை குழாய்கள் மூலம் பெருங்குடி சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும்.

ஏரியில் முற்றிலும் சுத்தமான நீர் மட்டுமே செல்லும். தற்போது பெரிய ஏரியில் 5 ஏக்கரில் உள்ள குப்பைகள் முழுவதும் அந்த இடத்தில் இருந்து ‘பயோ மைனிங்’ முறையில் அகற்றப்படும். தூய்மை இந்தியா திட்டத்தில் இந்த பணி நடைபெறும்.

2 ஏரிகளிலும் மழைநீர் முழுவதுமாக சேமிக்கப்பட்டு கரைகளில் நடைபாதை அமைக்கவும், பல்லாவரம் பகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக இந்த 2 ஏரிகளையும் மாற்றும் வகையிலும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story