‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி நாமக்கல்லில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்


‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி நாமக்கல்லில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Sept 2017 4:30 AM IST (Updated: 14 Sept 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் நேற்று ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நாமக்கல்,

தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க. மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாமக்கல் அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி தலைமை தாங்கினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பார்.இளங்கோவன், முன்னாள் மத்திய மந்திரி காந்திசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஓட்டுக்காக அல்ல

இந்த ஆர்ப்பாட்டத்தில் வி.பி.துரைசாமி பேசும்போது கூறியதாவது:- ‘நீட்’ விவகாரத்தில் நிர்மலா சீத்தாராமன் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்தார். அவருக்கு மத்திய மந்திரி பதவியை மத்திய அரசு வழங்கி உள்ளது. போராட்டங்கள் இல்லை என்றால் நீதி கிடைக்காது. தி.மு.க. தற்போது போராட்டம் நடத்துவது ஓட்டுக்காக அல்ல. ஏழை குழந்தைகளும் டாக்டர் ஆகவேண்டும் என்பதற்காக தான். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஆட்சியை தூக்கி எறிய பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ரத்து செய்ய வலியுறுத்தி கோஷம்

தொடர்ந்து ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சம்பத்குமார், பொன்னுசாமி, தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஷேக்நவீத், முன்னாள் மாவட்ட தலைவர்கள் டாக்டர் செழியன், ஜி.ஆர்.சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் தம்பிராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தி.மு.க. தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணியினர் திரளாக கலந்துகொண்டனர்.

முன்னதாக நாமக்கல் நகர பொறுப்பாளர் மணிமாறன் வரவேற்று பேசினார். முடிவில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராமசுவாமி நன்றி கூறினார்.


Next Story