நீட் தேர்விற்கு நிரந்தர விலக்கு அளிக்கக்கோரி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்விற்கு நிரந்தர விலக்கு அளிக்கக்கோரி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Sept 2017 4:30 AM IST (Updated: 14 Sept 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்கக்கோரி கிருஷ்ணகிரி, ஓசூரில் அனைத்து கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், கிழக்கு மாவட்ட தி.மு.க மற்றும் அனைத்து கட்சி சார்பில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சுகவனம் தலைமை தாங்கினார். தி.மு.க மாவட்ட அவைத்தலைவர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கனியமுதன், திராவிடர் கழக மண்டல செயலாளர் திராவிடமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் நஞ்சுண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிருஷ்ணகிரி நகர தி.மு.க செயலாளர் நவாப் வரவேற்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜாபர், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நூர்முகமது, தி.மு.க. நிர்வாகி சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பொன்.குணசேகரன், தம்பிதுரை, ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் மற்றும் பல்வேறு கட்சியினர், கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி மாணவிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

ஓசூர்

இதே போல கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் மத்திய, மாநில அரசை கண்டித்து ஓசூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், தளி எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் தலைமை தாங்கினார். வேப்பனபள்ளி எம்.எல்.ஏ. முருகன், ஓசூர் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோபிநாத், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் லகுமய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வை நீக்க கோரியும், மத்திய, மாநில அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மாவட்ட தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் எஸ்.ஏ. சத்யா, ஓசூர் நகர தி.மு.க. செயலாளர் என்.எஸ்.மாதேஸ்வரன், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், ஓசூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் நீலகண்டன், காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாயிகள் பிரிவு பொதுச்செயலாளர் சூர்யகணேஷ், திராவிடர் கழக மாவட்ட தலைவர் துக்காராம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

Next Story