முதியவரை கொலை செய்து நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


முதியவரை கொலை செய்து நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Sept 2017 4:30 AM IST (Updated: 14 Sept 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிமடம் அருகே முதியவரை கொலை செய்து விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அழகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 79). கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவி பிரிந்து சென்றதால் 2-வதாக சரோஜா என்பவரை திருமணம் செய்தார். இதில் அவருக்கு 8 மகள்களும், அண்ணாதுரை (42) என்ற மகனும் உள்ளனர். மகள்கள் மற்றும் மகனுக்கு திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மனைவி சரோஜா இறந்து விட்டதால் கலியபெருமாள் தனியாக வசித்து வந்தார். அப்பகுதியில் வசிக்கும் அண்ணாதுரை தனது தந்தைக்கு உதவியாக இருந்தார்.

இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று காலை வேலைக்காரர் செல்வராஜ் மூலம் அண்ணாதுரை தனது தந்தைக்கு டீ கொடுத்து அனுப்பினார். செல்வராஜ் டீயை எடுத்து கொண்டு கலியபெருமாள் வீட்டிற்கு சென்றார். அப்போது கதவின் வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. பின்னர் கதவை திறந்து உள்ளே சென்று கலியபெருமாளை எழுப்ப முயன்ற போது, கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த செல்வராஜ் உடனடியாக அலறி அடித்து கொண்டு வெளியே வந்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தார்.

இதற்கிடையே ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், வேலுசாமி உள்பட போலீசார் வந்து கலியபெருமாள் பிணமாக கிடந்த அறையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கலியபெருமாள் தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் நன்கு நோட்டமிட்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். பின்னர் அவரை அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

மேலும் அவர் அணிந்திருந்த 4 தங்க மோதிரங்கள், கழுத்தில் அணிந்திருந்த தங்கசங்கிலி, வெள்ளி அரைஞாண் கயிறு உள்ளிட்டவற்றை கொள்ளையடித்திருக்கின்றனர். மேலும் வீட்டின் பீரோவை உடைத்து பாண்டு பத்திரம், நிலம்-வீடு பத்திரங்கள், ரொக்கப்பணம் ஆகியவற்றையும் கொள்ளையடித்து விட்டு மர்ம நபர்கள் தப்பி விட்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. மொத்தம் 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பணம் எவ்வளவு கொள்ளை போனது என்பது உடனடியாக தெரியவில்லை. பின்னர் கலியபெருமாளின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் பார்வையிட்டு கொலை நடந்த இடத்தின் அருகே வசிப்பவர்களிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார். அப்போது முன்விரோதம் காரணமாக தெரிந்த நபர்கள் யாராவது இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே மோப்பநாய் டிக்சி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு துப்பறியப்பட்டது. அந்த நாய் கொலை நடந்த வீட்டிலிருந்து காலனி தெரு வழியாக சென்று வீரனார் குட்டை வரை சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்றது. எனினும் அந்த நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இது குறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் அண்ணாதுரை புகார் கொடுத்தார். இதையடுத்து கலியபெருமாளை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் ஆண்டிமடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story