நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் 4-வது நாளாக உண்ணாவிரதம்


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் 4-வது நாளாக உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 14 Sept 2017 4:30 AM IST (Updated: 14 Sept 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர். இதற்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து பேசினர்.

தஞ்சாவூர்,

நீட் தேர்வுக்கு எதிராக போராடி தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றக் கோரியும், நீட் தேர்வுக்காக போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறக்கோரியும் தஞ்சை கீழராஜவீதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று 4-வது நாளாக இந்த போராட்டம் நடந்தது. இதற்கு அன்னை வேளாங்கண்ணி கல்லூரி மாணவர் அரவிந்த் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திருஞானம் தொடங்கி வைத்தார்.

இதில் கல்லூரி மாணவர்கள் பிரபாகரன், சீமான், இளையராஜா, மணிமாறன், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் முகில் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில பொதுச் செயலாளர் காமராசு, விவசாய தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் பாலசுந்தரம், பன்னீர்செல்வம், விவசாய தொழிலாளர் சங்க தலைவர்கள் பக்கிரிசாமி, கிருஷ்ணன், முன்னாள் அரசு பணியாளர் சங்க நிர்வாகி பாலசுப்பிரமணியன், அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்காரவி ஆகியோர் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.

மாணவர்கள் சிலர் நிருபர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு நவோதயா பள்ளிகளை திறக்க தமிழகஅரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது அ.தி.மு.க.வின் கொள்கைக்கும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் செய்த ஆட்சிகளுக்கும் விரோதமான முயற்சியாகும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழிவந்த ஆட்சி என கூறும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க அனுமதிக்கக்கூடாது. இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்று கூறினர்.


Related Tags :
Next Story