காரில் கடத்தி சென்ற 10 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது


காரில் கடத்தி சென்ற 10 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 Sept 2017 4:30 AM IST (Updated: 14 Sept 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் இருந்து சென்னைக்கு காரில் கடத்தி சென்ற 10 கிலோ தங்கக்கட்டிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கணவன்-மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகையில் இருந்து சென்னைக்கு காரில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 4.30 மணியளவில் அதிகாரிகள் நாகை வாஞ்சூர் சோதனை சாவடியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகையில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஒரு காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் அங்கிருந்து வேகமாக சென்றது.

உடனே போலீசார் அந்த காரை விரட்டி சென்று மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது காரில் 10 கிலோ 700 கிராம் தங்க க்கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து தங்கக்கட்டிகளையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் காரில் வந்த 3 பேரை பிடித்து நாகை சுங்க இலாகா அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாகை அருகே உள்ள விழுந்தமாவடி பட்டி ரோடு பகுதியை சேர்ந்த மகாலிங்கம் (வயது 55) மற்றும் அவரது மனைவி ராதாமணி(44), புஷ்பவனம் கவுண்டர்காடு பகுதியை சேர்ந்த கதிர்வேல் மகன் ராகுபாலன்(35) என்பதும், இவர்கள் நாகையில் இருந்து சென்னைக்கு காரில் தங்கத்தை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த தங்கக்கட்டிகள் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டதா? யாருக்கு கடத்தி செல்லப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மகாலிங்கமும் மற்றும் அவரது மனைவி ராதாமணியும் விழுந்தமாவடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ.3½ கோடி இருக்கும் என கூறப்படுகிறது.


Next Story