நீட் தேர்வை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி


நீட் தேர்வை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 14 Sept 2017 4:30 AM IST (Updated: 14 Sept 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ரத்து செய்யும் வரை எதிர்க்கட்சி களுடன் இணைந்து தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

நெல்லை,

நெல்லை மாவட்ட தி.மு.க. சார்பில் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். தற்கொலை செய்து கொண்ட அனிதாவுக்கு நீதி கிடைக்க வேண்டும். பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவின்படி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. ஒரு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மகள் பிளஸ்-2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுப்பதில் ஆச்சரியம் இல்லை. ஒடுக்கப்பட்ட கூலி தொழிலாளியின் மகள் அனிதா 1,176 மதிப்பெண்கள் எடுத்து மருத்துவ ‘கட்-ஆப்‘பில் 196.5 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

அவருக்கு மருத்துவ கல்லூரியில் சேருவதற்கு இடம் கிடைக்காததற்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம். அ.தி.மு.க. அரசு, ஆட்சியை தக்கவைப்பதில் குறியாக உள்ளது. அவர்கள் சரியான நேரத்தில் ஜனாதிபதியின் ஒப்புதலை பெற முயற்சி செய்யவில்லை.

எடப்பாடி அரசு, மத்திய அரசிடம் சரண் அடைந்து விட்டனர். இந்த அரசு தொடர்ந்து ஆட்சி நடத்துவதற்கு தகுதி இல்லை. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம், போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் என தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத இந்த அரசு ராஜினாமா செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மைதீன்கான், பூங்கோதை, லட்சுமணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அப்பாவு, வேல்துரை, கோதர்முகைதீன், காங்கிரஸ் தலைவர்கள் சங்கரபாண்டியன், எஸ்.கே.எம்.சிவக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் பாட்டபத்து முகமது அலி, இளைஞர் அணி செயலாளர் கடாபி, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் உஸ்மான்கான், பெருத்தலைவர் மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் அந்தோணி தாஸ், நெல்லை மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் கரிசல் சுரேஷ், தி.மு.க. நிர்வாகிகள் சுப.சீதாராமன், பேச்சிப்பாண்டியன், பெருமாள், சரவணன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வானாமாமலை, அந்தோணி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறும்போது, “அ.தி.மு.க. அரசும், அதிகாரிகளும் கொடுத்த வாக்குறுதியின்படி நடந்து இருந்தால், மாணவி அனிதா தற்கொலை செய்து இருக்க மாட்டார். அவர் தற்போது ஒரு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்து கொண்டு இருப்பார். நீட் தேர்வு தமிழகத்தில் தொடர்ந்து நடந்தால் அனிதா போன்று பல மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யும் வரை எதிர்கட்சிகளுடன் இணைந்து தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். அ.தி.மு.க. பொதுக்குழுவில் மக்களுக்கு தேவையான தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை“ என்றார். 

Next Story