உடும்பை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட வாலிபர் கைது


உடும்பை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 Sept 2017 3:45 AM IST (Updated: 14 Sept 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே உடும்பை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் 4 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

ஆரல்வாய்மொழி,

பூதப்பாண்டி வன சரகம் மகேந்திரகிரி மலை பகுதிக்குட்பட்ட ஆரல்வாய்மொழி அருகே சிவகாமிபுரம் வனப்பகுதிக்குள் சிலர் இரவு முழுவதும் தங்கியிருந்து வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் வனசரகர் வெங்கடாஜலபூபதி மேற்பார்வையில் வனவர் சிவகுமார், வனகாப்பாளர்கள் அய்யப்பன், குமார், நீலாவதி உள்பட வனத்துறையினர் மகேந்திரகிரி வனப்பகுதிக்குள் கடந்த 2 நாட்களாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையே சிவகாமிபுரம் ராஜீவ்காந்தி நகர் மேலத்தெருவை சேர்ந்த அனந்த கிருஷ்ணன் என்பவருடைய வீட்டில் வேட்டையாடிய வனவிலங்கை சமைத்து சாப்பிடுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, வனத்துறையினர் அந்த வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.

உடும்பு வேட்டை

அப்போது, உடும்பை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த அனந்தகிருஷ்ணன் மகன் கிருஷ்ணகுமார் (19) என்பவரை பிடித்தனர். பின்னர் அவரை பூதப்பாண்டி வனசரக அலுவலகத்திற்கு கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கும்பலாக சேர்ந்து வனப்பகுதியில் உடும்பை வேட்டையாடியது தெரியவந்தது. மேலும் இதுபற்றிய விவரம் வருமாறு:–

கிருஷ்ணகுமாருடன் அதே பகுதியை சேர்ந்த பால்சன் (35), மணிகண்டன் (27), வேல்முருகன் (32) மற்றும் விருதுநகர் மாவட்டம் துலுக்கப்பட்டியை சேர்ந்த செல்வின் (26) ஆகிய 5 பேர் கடந்த 11–ந் தேதி காலை வனப் பகுதிக்கு வேட்டைக்கு சென்றனர். பகலில் ஒன்றும் கிடைக்காததால் இரவு அங்கேயே தங்கினர். அப்போது ஒரு உடும்பை வேட்டையாடி அதே இடத்தில் பங்கு வைத்தனர். பின்னர் அந்த உடும்பை சமைத்து சாப்பிட்ட போது கிருஷ்ணகுமார் பிடிபட்டுள்ளார்.

4 பேருக்கு வலைவீச்சு

இதுதொடர்பாக பூதப்பாண்டி வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமாரை கைது செய்து நாகர்கோவிலில் உள்ள வன சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இதுதொடர்பாக மற்ற 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story