இந்திய மருத்துவ கவுன்சில் அனுப்பிய கடிதம் கிடைத்த உடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
இந்திய மருத்துவ கவுன்சில் அனுப்பிய கடிதம் கிடைத்த உடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி,
தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பிரச்சினை தொடர்பாக கல்லூரி முதல்வர் ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–
இந்த கல்வி ஆண்டில் 1350 பேர் புதுவை மாநிலத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள நிர்வாக இடஒதுக்கீட்டில் சேர வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அதில் 20 சதவீதம் பேர் மட்டுமே கல்லூரிகளில் சேர்ந்தனர். எனவே காலியாக இருந்த இடங்கள் மத்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் ஒதுக்கீட்டில் புதுவை மாநிலத்தில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. இப்படி இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு சேர்க்கை குறித்து புகார் செய்து இருப்பது காலதாமதமான நடவடிக்கை. இதனால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தான்.இந்திய மருத்துவ கவுன்சில் அனுப்பிய கடிதம் இன்னும் எங்களுக்கு வரவில்லை. அந்த கடிதம் வந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே போல் நிகர்நிலை பல்கலைக்கழங்களில் கேட்டபோதும் அவர்களும் இதே கருத்தை தெரிவித்தனர்.