மந்தாரக்குப்பம் அருகே என்ஜினீயர் கத்தியால் குத்திக்கொலை வாலிபர் கைது


மந்தாரக்குப்பம் அருகே என்ஜினீயர் கத்தியால் குத்திக்கொலை வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 Sept 2017 7:00 AM IST (Updated: 14 Sept 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

மந்தாரக்குப்பம் அருகே என்ஜினீயரை கத்தியால் குத்திக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மந்தாரக்குப்பம்,

மந்தாரக்குப்பம் அருகே மேல்பாப்பனப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்முருகன். என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி. இவருக்கும், பழைய நெய்வேலியை சேர்ந்த செந்தமிழ்செல்வி என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், கணவன்–மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதே போல், நேற்று முன்தினம் மதியம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் கணவனிடம் கோபித்துக் கொண்டு செந்தமிழ்செல்வி, பழைய நெய்வேலியில் உள்ள தனது அண்ணன் ராமச்சந்திரன்(33) என்பவரது வீட்டிற்கு வந்தார். பின்னர், அவர் தனது அண்ணனிடம் குடும்ப பிரச்சினைகளை கூறி கதறி அழுதார். அப்போது செந்தமிழ்செல்வியை, ராமச்சந்திரன் சமாதானப்படுத்திவிட்டு அங்கிருந்து சொந்தவேலை காரணமாக வெளியே சென்றார்.

இந்த நிலையில், செந்தில்முருகன், ராமச்சந்திரன் வீட்டிற்கு வந்தார். பின்னர், அங்கிருந்த செந்தமிழ்செல்வியை தன்னுடன் வீட்டிற்கு வருமாறு அழைத்தார். ஆனால், அவர் வர மறுத்துவிட்டார். இதில் கணவன்–மனைவிக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த செந்தில்முருகன் அங்கிருந்து புறப்பட்டு தனது வீட்டிற்கு சென்றார்.

இதனால் மனவேதனையில் இருந்த செந்தமிழ்செல்வி, அன்று இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வந்த அண்ணன் ராமச்சந்தினிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர், செந்தில்முருகனை குத்திக் கொன்று விடுகிறேன் என்று கூறி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்துக் கொண்டு ஆவேசமாக கிளம்பினார்.

செந்தில்முருகன் வீட்டின் அருகே சென்றுக் கொண்டிருந்த அவரை, அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர் சண்முகசுந்தரம், அவரது தம்பி என்ஜினீயர் சிவபாலன்(22) ஆகிய 2 பேரும் வழிமறித்து, குடும்ப பிரச்சினையை பேசிக் கொள்ளலாம் என்று கூறினர். அப்போது ராமச்சந்திரன், செந்தில்முருகனை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று கூறி, அவர்களுடன் வாய்தகராறில் ஈடுபட்டார்.

இந்த சத்தம் கேட்டு செந்தில்முருகன் வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தார். இதனை பார்த்த ராமச்சந்திரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தில்முருகனை வெட்டினார். இதை தடுத்த சண்முகசுந்தரம், சிவபாலனையும் அவர் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதில் படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிவபாலன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்த புகாரின்பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமச்சந்திரனை தேடி வந்தனர். இந்த நிலையில், மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

தங்கையின் குடும்ப பிரச்சினையை தடுக்க சென்ற வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story