நகல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பதை அனுமதிக்கக்கோரி ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


நகல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பதை அனுமதிக்கக்கோரி ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Sep 2017 11:00 PM GMT (Updated: 2017-09-15T01:51:52+05:30)

வாகனம் ஓட்டும் போது நகல் ஓட்டுனர் உரிமத்தை அதிகாரப்பூர்வமாக வைத்திருக்க அனுமதிக்கக்கோரி பெரம்பலூரில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுனர்கள் தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலைய பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மல்லீஸ்குமார், அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் அழகர்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அசல் ஓட்டுனர் உரிமத்தை கட்டாயம் வாகனம் ஓட்டும் போது வைத்திருக்க வேண்டும் என்பதை கைவிட வேண்டும். நகல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க அனுமதிக்க வேண்டும். பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக் கும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

கோஷம் எழுப்பினர்

ஆர்ப்பாட்டத்தின் போது ஆட்டோ டிரைவர்கள், சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் உள்ளிட்டோர் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சண்முகம், மாவட்ட செயலாளர் ரெங்கநாதன் மற்றும் மின் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அகஸ்டின் உள்பட நிர்வாகிகள், ஆட்டோ டிரைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தை சேர்ந்த ஷேர் ஆட்டோ, பயணிகள் ஆட்டோ (நார்மல் ஆட்டோ) டிரைவர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் பெரம்பலூர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோக்களின் இயக்கம் குறைவாகவே காணப்பட்டது. இந்த போராட்டத்தில் பங்கேற்காத மற்ற ஆட்டோ டிரைவர்கள் வழக்கம் போல் ஆட்டோக்களை இயக்கினர். 

Next Story