கோவையில் நீட் தேர்வை கண்டித்து முஸ்லிம் பெண்கள் ஆர்ப்பாட்டம்


கோவையில் நீட் தேர்வை கண்டித்து முஸ்லிம் பெண்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Sept 2017 4:15 AM IST (Updated: 15 Sept 2017 2:05 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் நீட் தேர்வை கண்டித்து முஸ்லிம் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கோவை,

தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பெண்கள் அமைப்பு சார்பில்(விமன் இந்தியா மூவ்மெண்ட்) கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சாஜிதா வரவேற்றார். மாவட்ட தலைவர் பரிதா பேகம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பர்சானா பேசியதாவது:-

நீட் தேர்வினால் ஏழை எளிய மாணவர்கள் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்துள்ளது. எனவே தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். மேலும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் நீட் தேர்வையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அதுவரை போராட்டங்கள் தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் சர்மிளா பானு உள்பட ஏராளமான முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கட்சி கொடிகளை ஏந்தி வந்து கோஷங்கள் எழுப்பினார்கள். 

Next Story