பெங்களூரு தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை மைனர்பெண்ணை திருமணம் செய்து வைக்க தந்தை மறுத்ததால்


பெங்களூரு தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை மைனர்பெண்ணை திருமணம் செய்து வைக்க தந்தை மறுத்ததால்
x
தினத்தந்தி 15 Sept 2017 2:15 AM IST (Updated: 15 Sept 2017 2:14 AM IST)
t-max-icont-min-icon

கோலார் தங்கவயலில் பெங்களூரு தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.

கோலார் தங்கவயல்,

கோலார் தங்கவயலில் பெங்களூரு தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டார். மைனர் பெண்ணை திருமணம் செய்துவைக்க தந்தை மறுத்ததால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

காதல்

கோலார் தங்கவயலை அடுத்துள்ள பெட்டமாதமங்களா பகுதியை சேர்ந்தவர் மகேஷ் ரெட்டி. இவருடைய மகன் ரமேஷ் ரெட்டி (வயது 22). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். மேலும் அதேப்பகுதியை சேர்ந்த 17 வயது மைனர்பெண்ணும், ரமேஷ் ரெட்டியும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு ரமேஷ் ரெட்டி தனது காதலியை அழைத்துக் கொண்டு பெட்டமாதமங்களாவில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.

அப்போது அவர், தான் இந்த பெண்ணை காதலிப்பதாகவும், தங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் தனது தந்தை மகேஷ் ரெட்டியிடம் கூறியுள்ளார். அந்த சமயத்தில் மகேஷ் ரெட்டி, அந்த பெண்ணுக்கு 18 வயது ஆகவில்லை என்றும், 18 வயது பூர்த்தி அடையாத பெண்ணை திருமணம் செய்தால் பிரச்சினை ஏற்படும் என்றும் கூறியுள்ளார். ஆனாலும், அதனை ஏற்க ரமேஷ் ரெட்டி மறுத்துள்ளார்.

தற்கொலை

இதனால் கோபமடைந்த மகேஷ் ரெட்டி, மைனர் பெண்ணை திருமணம் செய்துவைக்க முடியாது என்றும், ஒரு வருடம் காத்திருக்கும்படியும் கூறியுள்ளார். இதையடுத்து மகேஷ் ரெட்டியும், ரமேஷ் ரெட்டியும் சேர்ந்து அந்த மைனர் பெண்ணை பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டுக்கு கொண்டு போய்விட்டு வந்தனர். தனக்கு திருமணம் செய்துவைக்க தந்தை மறுத்ததால் ரமேஷ் ரெட்டி மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரமேஷ் ரெட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அப்போது வெளியே சென்றிருந்த மகேஷ் ரெட்டி வீட்டிற்கு திரும்பி வந்தார். தனது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், ரமேஷ் ரெட்டியின் உடலை பார்த்து கதறி அழுதார்.

போலீஸ் விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாரிகுப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் ரமேஷ் ரெட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாரிகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story