கீரிப்பாறை அருகே வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற 2 பேர் கைது நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்


கீரிப்பாறை அருகே வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற 2 பேர் கைது நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்
x
தினத்தந்தி 20 Sep 2017 8:30 PM GMT (Updated: 20 Sep 2017 2:42 PM GMT)

கீரிப்பாறை அருகே வேட்டையாட முயன்றதாக 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

அழகியபாண்டியபுரம்,

கீரிப்பாறை அருகே வேட்டையாட முயன்றதாக 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றியவர்கள்

குமரி மாவட்ட வனத்துறை அதிகாரி விஸ்மிஜு விஸ்வநாதன் உத்தரவின்பேரில், வனச்சரகர் திலீபன் தலைமையில், வனவர் விஜயன், வன காப்பாளர் ஜெயசேகர், வனக்காவலர் ஜோயல், வேட்டைத்தடுப்புக்காரர்கள் சிந்து, சுரேஷ் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் மாலை கீரிப்பாறை வனத்துறை சோதனைச்சாவடி அருகே உள்ள பள்ளக்குளம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தபடி இருந்தனர். அவர்கள் வனத்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் வனத்துறையினர் அவர்களை மோட்டார் சைக்கிளுடன் மடக்கி பிடித்தனர்.

காட்டுப்பன்றி வேட்டை

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறை அதிகாரிகள் பிடிபட்ட 2 பேரையும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் 2 பேரும் தடிக்காரன்கோணம் அருகே உள்ள புறாவிளையை சேர்ந்த குமார் (வயது 36), மணிகண்டன் (32) என்பது தெரிய வந்தது.

மேலும் அவர்கள் வைத்திருந்த துப்பாக்கி வெள்ளாம்பி பகுதியை சேர்ந்த மாஸ்குட்டி காணி என்பவருக்கு சொந்தமானது என்பதும், இவர்கள் வனப்பகுதிக்குள் நுழைந்து காட்டுப்பன்றிகளை வேட்டையாடியதும் தெரிய வந்தது.

கைது

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, வனமிருகங்களை வேட்டையாட முயன்றதாக அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், வெடிமருந்து நிரப்பப்பட்ட நாட்டு துப்பாக்கி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் 2 பேரும், நாகர்கோவிலில் உள்ள வனத்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கில் நாட்டுத்துப்பாக்கியின் உரிமையாளரான மாஸ்குட்டி காணியை வனத்துறையினர் தேடி வருகிறார்கள்.


Next Story