தென்காசி அருகே பரிதாபம் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி தலைமை ஆசிரியை சாவு 3 ஆசிரியைகள் படுகாயம்


தென்காசி அருகே பரிதாபம் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி தலைமை ஆசிரியை சாவு 3 ஆசிரியைகள் படுகாயம்
x
தினத்தந்தி 20 Sep 2017 8:45 PM GMT (Updated: 2017-09-20T20:53:54+05:30)

தென்காசி அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பள்ளி தலைமை ஆசிரியை பரிதாபமாக இறந்தார். மேலும் 3 ஆசிரியைகள் படுகாயம் அடைந்தனர்.

தென்காசி,

தென்காசி அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பள்ளி தலைமை ஆசிரியை பரிதாபமாக இறந்தார். மேலும் 3 ஆசிரியைகள் படுகாயம் அடைந்தனர்.

தலைமை ஆசிரியை

தென்காசி அருகே உள்ள மேலகரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி நெல்லை (வயது 52). இவர் தென்காசி அருகே பாட்டாகுறிச்சியில் உள்ள தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று மாலை பள்ளி முடிந்ததும் தலைமை ஆசிரியை நெல்லை வீட்டுக்கு செல்வதற்காக ஆட்டோவில் சென்றார். அப்போது பக்கத்து ஊரில் உள்ள பள்ளிகளில் ஆசிரியைகளாக பணியாற்றி வரும் தென்காசி கோகுலம் காலனியை சேர்ந்த ராஜாத்தி (49), தென்காசி வடக்குமாசி தெருவை சேர்ந்த சவுந்தரசெல்வி (45), மேலகரம் பாரதிநகரை சேர்ந்த சராபின் (49) ஆகியோரும் அவருடன் ஆட்டோவில் வந்தனர்.

ஆட்டோ கவிழ்ந்து சாவு

வழியில் திடீரென்று ஆட்டோ, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இதில் தலைமை ஆசிரியை நெல்லை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் ராஜாத்தி, சவுந்தரசெல்வி, சராபின் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் தலைமை ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story