மாணவ, மாணவிகளை வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும்


மாணவ, மாணவிகளை வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும்
x
தினத்தந்தி 20 Sep 2017 10:45 PM GMT (Updated: 2017-09-21T00:41:13+05:30)

பள்ளி மாணவ, மாணவிகளை வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச்செல்ல வேண்டும் என ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை வழங்கினார்.

போளூர்,

தமிழகத்தின் தொன்மையான கலாசாரம் சார்ந்த விழிப்புணர்வினை மாணவ- மாணவிகளுக்கு ஏற்படுத்திட பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றங்கள் அமைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வரலாற்று ஆசிரியர்களுக்கான சிறப்பு கூட்டம் போளூரில் நடந்தது.

திருவண்ணாமலை கல்வி மாவட்ட வரலாற்று ஆசிரியர்களுக்கு போளூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், செய்யாறு கல்வி மாவட்ட வரலாற்று ஆசிரியர்களுக்கு செய்யாறு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் கூட்டம் நடந்தது. போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் தொன்மை பாதுகாப்பு மன்றத்தை ஏற்படுத்தி அதற்கென ஒரு பொறுப்பாசிரியரை நியமித்து செயல்படுத்த வேண்டும். வாரந்தோறும் தொன்மை பாதுகாப்பு மன்றத்தை கூட்டி, மாணவர்களுக்கு வரலாற்று தகவல்களும், தொன்மையான பொருட்கள் குறித்தும், அகல்வாராய்ச்சிகள் குறித்தும் கற்றுக்கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் தொன்மை பாதுகாப்பு மன்றத்திற்கென பதிவேடு ஏற்படுத்தி அதில் உறுப்பினர்களாகும் மாணவ- மாணவிகளின் பெயர் மற்றும் வருகை பதிவு விவரம் பதியப்பட வேண்டும்.

மன்ற நிகழ்வுகளின் அறிக்கை, புகைப்படத்துடன் பதிவு செய்து வைத்தல் வேண்டும். மாணவர்களின் பங்களிப்புடன் பள்ளியை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள தொன்மையான பொருட்கள், இடங்களில் புகைப்படங்கள், பழங்கால நாணயங்கள், அஞ்சல் வில்லைகள், பழங்கால மக்கள் பயன்படுத்திய பாத்திரங்கள் மற்றும் கருவிகள் ஆகியவற்றை பள்ளிகளில் சேமித்து பாதுகாத்து வைத்திட வேண்டும்.

இந்த மன்றத்தில் தலைமை ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், தன்னார்வலர்கள் ஆகியோர் இருத்தல் வேண்டும். மாணவர்களை வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு கல்விச்சுற்றுலாவாக ஆசிரியர்கள் அழைத்து செல்ல வேண்டும்.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தொன்மை பொருட்கள் குறித்த கண்காட்சி நடத்தப்பட வேண்டும். தொன்மை பொருட்கள் சம்பந்தப்பட்ட கண்காட்சி மாவட்ட அளவில் நடத்தப்பட்டு அதில் அதிக ஆர்வம் காட்டும் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை கல்வி மாவட்ட அலுவலர் அருள்செல்வம், ஆய்வாளர் குமார், பள்ளி தலைமை ஆசிரியர் கருணாநிதி, ஆசிரியை பாக்கியவதி, தொன்மை பாதுகாப்பு மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பாளர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அரசு ஆண்கள் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த தொன்மை பொருட்கள் கண்காட்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், பிரபாகரன், வெங்கட்ராமன், ஆசிரியை ரேவதி ஆகியோர் செய்திருந்தனர். 

Related Tags :
Next Story