கிராமப்புறங்களில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு பிரச்சினையால் மோதல் அபாயம் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை


கிராமப்புறங்களில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு பிரச்சினையால் மோதல் அபாயம் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 20 Sep 2017 10:30 PM GMT (Updated: 2017-09-21T00:57:00+05:30)

கிராமங்களில் உள்ள பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் பொதுப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பொதுப்பாதைகள் பல வருடங்களாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பாதை வழியாகத்தான் கிராம மக்கள் வேலைக்கும், கிராமத்து குழந்தைகள் பள்ளிகளுக்கும் சென்று வரும் நிலை உள்ளது. அதிலும் குறிப்பாக ஆதி திராவிட சமுதாய மக்கள் தங்கள் பகுதியில் உள்ள பொதுப்பாதை வழியாகத்தான் தங்களுக்கு தேவையான தண்ணீரையும் எடுத்து வரும் நிலை உள்ளது.

சமீபகாலமாக பல்வேறு கிராமங்களில் கிராம மக்கள் பயன்படுத்தி வரும் பொதுப்பாதையை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து கிராம மக்களும் அந்த வழியாக செல்வதற்கு தடை விதிக்கும் நிலை அதிகரித்து வருகின்றது. ஒரு சில கிராமங்களில் மயானத்திற்கு செல்லும் பாதையை கூட தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ள நிலை உள்ளது.

இது பற்றி உள்ளாட்சி நிர்வாகத்திடமும், போலீசாரிடமும் முறையிட்டு பலனில்லாத நிலையில் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியின் போது கலெக்டரிடம் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகள் பற்றி மனுக்கள் கொடுக்கப்படுகின்றன. கலெக்டரும் சம்பந்தப்பட்ட பகுதி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பின்னரும், நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டப்படும் நிலை உள்ளது. இதனால் தேவையற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க தனிக்குழு அமைத்து ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு உறுதியாகும் பட்சத்தில் அதனை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது. இல்லையேல் மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகி பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உண்டாகி விடும்.


Next Story