கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை: ‘நீல திமிங்கலம்’ விளையாட்டில் ஈடுபட்டாரா? போலீஸ் விசாரணை


கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை: ‘நீல திமிங்கலம்’ விளையாட்டில் ஈடுபட்டாரா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 21 Sep 2017 12:00 AM GMT (Updated: 20 Sep 2017 7:56 PM GMT)

சின்னமனூர் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் ‘நீல திமிங்கலம்’ விளையாட்டில் ஈடுபட்டதால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சின்னமனூர்,

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டையை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய மகன் ரகுவரன்(வயது 21). இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வந்தார். அவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ரகுவரன் கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வந்தார். பின்னர் இரவு தலை வலிப்பதாக கூறி, தனது அறைக்கு தூங்க சென்றார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவருடைய அறை கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பாலமுருகன் கதவை தட்டினார். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. உடனே கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ரகுவரன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்து அவருடைய பெற்றோர் கதறி அழுதனர்.

தகவலறிந்த ஓடைப்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இறந்த ரகுவரனின் இடது கையில் கத்தியால் அறுக்கப்பட்டு காயம் இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ‘நீல திமிங்கலம்’ விளையாட்டில் ஈடுபட்டு கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதியில் தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தினர். விசாரணையில், ரகுவரன் இரவு நேரங்களில் செல்போனில் விளையாடி கொண்டே இருப்பார் என்று கோயம்புத்தூரில் அவருடன் படிக்கும் நண்பர்கள் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அவர் பயன்படுத்திய செல்போன், மடிக்கணினி ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் சோதனை நடத்த உள்ளனர். மேலும் அவர் ‘நீல திமிங்கலம்’ விளையாட்டில் ஈடுபட்டாரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த மாணவர் ரகுவரன் கடந்த மாதம் தேசிய அளவில் ஆந்திராவில் நடைபெற்ற ‘செபாக் டக்ரோ’ என்ற விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story