‘நீல திமிங்கலம்’ விளையாட்டில் குழந்தைகள் ஈடுபடுகிறார்களா என பெற்றோர் கண்காணிக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்


‘நீல திமிங்கலம்’ விளையாட்டில் குழந்தைகள் ஈடுபடுகிறார்களா என பெற்றோர் கண்காணிக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 20 Sep 2017 11:15 PM GMT (Updated: 20 Sep 2017 7:56 PM GMT)

தேனி மாவட்டத்தில் ‘நீல திமிங்கலம்’ விளையாட்டில் குழந்தைகள் ஈடுபடுகிறார்களா? என பெற்றோர்கள் கண்காணிக்கவேண்டும் என்று கலெக்டர் வெங்கடாசலம் அறிவுறுத்தியுள்ளார்.

தேனி,

‘நீல திமிங்கலம்’ விளையாட்டு (புளுவேல் கேம்) என்பது, இன்றைய சமுதாயத்தினை அதிகளவில் அச்சுறுத்தும் ஒரு இணையதள விளையாட்டாக உள்ளது. ‘நீல திமிங்கலம்’ விளையாட்டால் நாளுக்கு நாள் வளர் இளம் பருவத்தினர் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இவ்விளையாட்டால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தான் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இது குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இந்த விளையாட்டு ஆரம்பத்தில் ஆர்வத்தை தூண்டுவதோடு, சுற்றியிருப்பவர்களை தவிர்த்து தனிமையில் இருக்க செய்யும். பிறரின் எதிர்ப்பையும் மீறி இந்த விளையாட்டில் ஆர்வமாக இருக்கின்றார்களா? என்பதையும், தொடர்ந்து விருப்பு வெறுப்புகளை தாண்டி சொல்லப்படும் சவால்களை செய்கிறார்களாக என்பதையும் கண்காணிக்கும்.

இவ்வாறு சுற்றியிருக்கும் உறவுகள், நட்புகள் மற்றும் சுய உணர்வினை முற்றிலும் அழித்து ஆதிக்கம் செலுத்திட ஆரம்பித்து, குழந்தைகளை தனிமையில் இருக்க செய்து அவர்களது எண்ணங்களை மாற்றி விடுவதால், இந்த விளையாட்டிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.

50 சதவீத சவால்களை முடித்த பின்னர் இவ்விளையாட்டிலிருந்து வெளிவர நினைப்பவர்களின் அந்தரங்கங்கள் வெளியிடப்படும் என்றும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் மிரட்டப்படுவதால் விளையாடுபவர்கள் செய்வதறியாது இறுதி சவால்கள் வரை விளையாடி தன் இன்னுயிரை மாய்த்து கொள்கின்றனர். எனவே குழந்தைகள் இந்த விளையாட்டை முழுமையாக தவிர்த்திட வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மடிக்கணினி மற்றும் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தினால் அவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

மேலும், இந்த விளையாட்டால் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது அவர்களது நடவடிக்கையில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தாலோ உடனடியாக ‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக முதல் தளம், பெருந்திட்ட வளாகம், தேனி’ என்ற முகாவரியில் நேரிலோ அல்லது 89031–84098 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம், குழந்தைகளுக்கு உடனடியாக அறிவுரைகள் வழங்கப்பட்டு, ஆபத்திலிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தேனி மாவட்டத்தில் ‘நீல திமிங்கலம்’ விளையாட்டு விளையாடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மூலமும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story