சென்னை அருகே பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் மத்திய மந்திரி பேட்டி


சென்னை அருகே பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் மத்திய மந்திரி பேட்டி
x
தினத்தந்தி 20 Sep 2017 10:45 PM GMT (Updated: 2017-09-21T01:33:55+05:30)

சென்னை அருகே பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய மந்திரி ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார். மத்திய விமான போக்குவரத்து துறை இணை மந்திரி ஜெயந்த் சின்ஹா, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:– மைசூருக்கு விமான சேவை நமது நாட்டில் விமான போ

ஆலந்தூர்,

சென்னை அருகே பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய மந்திரி ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

மத்திய விமான போக்குவரத்து துறை இணை மந்திரி ஜெயந்த் சின்ஹா, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

நமது நாட்டில் விமான போக்குவரத்து தொடங்கி 75 ஆண்டுகள் ஆகின்றன. இதில் பிரதமர் அறிமுகப்படுத்திய, இந்தியாவில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யக்கூடிய விமான சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஆண்டில் இதுவரை விமான சேவை இல்லாத 70 நகரங்களுக்கு சிறிய விமான நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட்டு விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. மைசூருக்கு சென்னையில் இருந்து முதல் விமான சேவையை தொடங்கி வைத்து உள்ளேன். ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்து மைசூருக்கு செல்லும். பின்னர் மைசூரில் இருந்து சென்னை வந்து ஐதராபாத்துக்கு செல்லும்.

நம் நாட்டில் சுமார் 400 விமான நிலையங்கள் உள்ளன. அதில் 100–க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் விமான சேவை இல்லை. 100 விமான நிலையங்களுக்காவது விமான சேவை தொடங்கப்பட உள்ளது. அந்தமான், நிக்கோபர் தீவுகள், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிக அளவில் விமான சேவை தொடங்க இருக்கிறோம்.

கடல் சூழ்ந்து, மலை பிரதேசங்களிலும் சிறிய விமானங்கள் தரை இறங்க வசதி இல்லை என்றால் அப்பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் சேவைகளை தொடங்குவது பற்றி ஆய்வு செய்து வருகிறோம்.

முதல் கட்டமாக சிறிய நகரங்களுக்கு விமான போக்குவரத்து தொடங்கியபோது முக்கிய தனியார் விமான நிறுவனங்கள் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை. தற்போது விமான சேவையின் விதிமுறைகளை தளர்த்தி இருப்பதால் இரண்டாம் கட்டத்தில் பல முன்னணி விமான நிறுவனங்கள் பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் 2 கோடி பயணிகளை கையாளும் வசதிகள் உள்ளன. சென்னை விமான நிலையம் வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் பயணிகளின் எண்ணிக்கை 3 கோடியில் இருந்து 5 கோடியாக உயரும் என நினைக்கிறோம். அதற்கு தகுந்தாற்போல் சென்னை விமான நிலையத்தை விரிவுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

அதற்காக சென்னை உள்நாட்டு முனையம் மற்றும் பன்னாட்டு முனையத்தை இணைக்க வேண்டும். ஏற்கனவே பழைய முனையங்களின் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு நவீனப்படுத்த மத்திய அரசு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு உள்ளது. இதற்கான பணி ஜனவரி மாதம் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த பணி 26 மாதங்களில் முடிக்கப்படும்.

வருங்காலத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளோம். சுமார் ஆயிரத்தில் இருந்து 1,200 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமை விமான நிலையம்(கீரின்பீல்டு) அமைக்க உள்ளோம். இந்த விமான நிலையத்தை சுற்றி அனைத்து வசதிகளுடன் கூடிய வகையில் இருந்தால் பொருளாதார வளர்ச்சி அடையும். இதற்கான நிலங்களை மாநில அரசிடம் கேட்டு உள்ளோம். மாநில அரசு நிலத்தை வழங்கினால் பசுமை விமான நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்படும்.

கோவை, திருச்சி, மதுரை விமான நிலையங்களை விரிவுப்படுத்தி சர்வதேச விமானங்களை கூடுதலாக இயக்க திட்டமிட்டு உள்ளோம். இந்த பணி செயல்பட தொடங்கினால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் நெரிசல் குறையும். சென்னையில் இருந்து ஓசூர், நெய்வேலி போன்ற நகரங்களுக்கு சிறிய ரக விமானங்களை இயக்குவது ஆய்வு செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.அப்போது சென்னை விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி உடன் இருந்தார்.


Next Story