புதிய வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பெருந்திரள் முறையீடு இயக்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கோவை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பெருந்திரள் முறையீடு இயக்கத்தின் சார்பில், கோவை மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி தலைமையில், அந்த கட்சியை சேர்ந்தவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பியவாறு கோவை மாநகராட்சி அலுவலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் தனி அதிகாரி விஜயகார்த்திகேயனிடம் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
கோவை மாநகராட்சி புதிதாக அறிவித்துள்ள வீடுகளை மறு அளவீடு செய்து வரிவிதிப்பு, குப்பைக்கு வரிவிதிப்பு உள்ளிட்ட வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. குடிநீர் செம்மண் நிறத்தில் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். தற்போது பெய்துள்ள கனமழையின் காரணமாக கோவை மாநகரில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனை உடனே சீரமைக்கவேண்டும். பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகிறது. இதனை கட்டுப்படுத்தவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதில் முன்னாள் எம்.பி.நடராஜன், வடக்கு மண்டல முன்னாள் தலைவர் பத்மநாபன், முன்னாள் எம்.எல்.ஏ. வெள்ளிங்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.