விக்கிரவாண்டி அருகே கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் மாணிக்கவாசகர் சிலை புதுச்சேரி போலீசில் ஒப்படைப்பு


விக்கிரவாண்டி அருகே கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் மாணிக்கவாசகர் சிலை புதுச்சேரி போலீசில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 20 Sep 2017 11:15 PM GMT (Updated: 2017-09-21T02:15:31+05:30)

விக்கிரவாண்டி அருகே கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் மாணிக்கவாசகர் சிலை புதுச்சேரி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விழுப்புரம்,

புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு கற்சிலைகள், ஐம்பொன்னால் ஆன பல சிலைகள் உள்ளன. இதில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட மாணிக்கவாசகர் சிலையும் ஒன்று.

இந்நிலையில் கடந்த 10.2.2008 அன்று இந்த கோவிலில் இருந்த மாணிக்கவாசகர் சிலை திடீரென மாயமானது. இதன் மதப்பு ரூ.10 லட்சமாகும்.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர், வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிலை குறித்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே 19.3.2010 அன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த தென்னமாதேவி கிராமத்தில் அய்யனார் கோவில் குளத்தை தூர்வாரியபோது ஐம்பொன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதன் பிறகு அந்த சிலை பாதுகாப்பாக விழுப்புரத்தில் உள்ள மாவட்ட கருவூலத்தில் வைக்கப்பட்டது.

இதுகுறித்த தகவலின் அடிப்படையில் புதுச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த சிலை, வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் இருந்து மாயமான மாணிக்கவாசகர் சிலைதான் என்பதை அறிந்தனர்.

இதுசம்பந்தமான வழக்கு புதுச்சேரி 3–வது நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதிபதி சரண்யாசெல்வம் விசாரித்தார். அப்போது விக்கிரவாண்டி அருகே கண்டெடுக்கப்பட்ட சிலையில் வில்வனூர் என பொறிக்கப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாக கொண்டால் வில்லியனூரின் பழைய பெயர் வில்வனூர். ஆகவே இந்த சிலை வில்லியனூர் கோவிலில் மாயமானதுதான் என சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து அந்த சிலையை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் நேற்று புதுச்சேரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வேலயன், கோவில் செயல் அலுவலர் திருவரசன் மற்றும் கோவில் நிர்வாகிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து கலெக்டர் சுப்பிரமணியனிடம் நீதிமன்ற உத்தரவு நகலை காண்பித்தனர்.

இதனை தொடர்ந்து அந்த சிலையை பெற்றுச்செல்லுமாறு கலெக்டர் சுப்பிரமணியன் அனுமதியளித்தார். அதன்பேரில் மாவட்ட கருவூலத்தில் இருந்து மாணிக்கவாசகர் சிலை, கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த சிலையை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அனுசுயாதேவி ஆகியோர் முன்னிலையில் புதுச்சேரி போலீசார் மற்றும் கோவில் நிர்வாகிகளிடம் விக்கிரவாண்டி தாசில்தார் (பொறுப்பு) பார்த்திபன் ஒப்படைத்தார்.


Next Story