அரசு கலைக்கல்லூரியில் பொன்விழா நினைவு தூண் அமைக்கும் பணி தீவிரம்


அரசு கலைக்கல்லூரியில் பொன்விழா நினைவு தூண் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 20 Sep 2017 10:45 PM GMT (Updated: 2017-09-21T02:48:33+05:30)

கரூர் அரசு கலைக்கல்லூரியில் பொன் விழா நினைவு தூண் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கரூர்,

கரூர் தாந்தோன்றிமலையில் அரசு கலைக்கல்லூரி கடந்த 1966-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டோடு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதையொட்டி பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் கல்லூரியில் நடந்தது. விழாவில் கல்லூரி தொடங்கி 50 ஆண்டுகள் ஆனதையொட்டி நினைவு தூண் அமைக்க முன்னாள் மாணவர்களும், கல்லூரி பேராசிரியர்களும் முடிவு செய்தனர். இதையடுத்து கல்லூரி நுழைவு வாயில் அருகே நினைவு தூண் அமைக்கும் பணிகள் தொடங்கியது. தற்போது இந்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பணிகள் குறித்து கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:-

“கரூர் அரசு கலைக்கல்லூரி கடந்த 1966-ம் ஆண்டு பி.யூ.சி. படிப்புடன் தொடங்கப்பட்டது. அதன்பிறகு 1967, 1968-ம் ஆண்டுகளில் கணிதம், வரலாறு பட்டப்படிப்புகள் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன. கடந்த 1972-73-ம் ஆண்டு முதல் கல்லூரியில் பெண்கள் சேர்க்கப்பட்டனர். தற்போது இளங்கலை, அறிவியலில் 17 பாடப்பிரிவுகளும், முது கலையில் 12 பாடப்பிரிவுகளும், 11 ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன.

கல்லூரியில் தற்போது 4 ஆயிரத்து 850 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி தொடங்கி 50 ஆண்டுகள் ஆனதையொட்டி அதன் நினைவாக வருங்கால மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும், கல்லூரிக்கு ஒரு அடையாளமாகவும் நினைவுதூண் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த தூண் 25 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது. கல்லூரியின் ஸ்லோகன் வாசகம் பொறிக்கப்பட உள்ளது. பணிகளை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story