‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி மோட்டார் சைக்கிளில் பிரசாரம் மேற்கொள்ளும் டாக்டர்


‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி மோட்டார் சைக்கிளில் பிரசாரம் மேற்கொள்ளும் டாக்டர்
x
தினத்தந்தி 20 Sep 2017 11:00 PM GMT (Updated: 2017-09-21T02:48:33+05:30)

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி, டாக்டர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் நூதன முறையில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் கரூர் வந்தார்.

கரூர்,

அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தங்கசண்முகசுந்தரம். அக்குபஞ்சர் டாக்டரான இவர், ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும், மாணவி அனிதா தற்கொலை சம்பவத்தில் நீதி விசாரணை கோரியும், மாணவர்கள் தற்கொலை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தியும் மோட்டார் சைக்கிளில் நூதன பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 6-ந்தேதி நாமக்கல் மாவட்டத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவர், நேற்று மதியம் கரூர் வந்தார்.

அப்போது அவர், தலையில் பனை ஓலையையும், கழுத்தில் தூக்கு கயிறையும் மாட்டி யிருந்தார். கோரிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை வண்டியிலும், உடம்பிலும் தொங்க விட்டிருந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி “தமிழகம் முழுவதும் இந்த பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.

தற்போது 2-ம் கட்டமாக நாமக்கல் வழியாக கரூர் வந்துள்ளேன். உடல் நிலை சரியில்லாததால் 2 நாட்கள் ஓய்வு எடுத்த பின் அடுத்த கட்ட பயணத்தை தொடர உள்ளேன்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்ற பின் சென்னையில் தலைமை செயலகத்தில் பயணத்தை முடித்து அங்கு மனு அளிக்க உள்ளேன்” என்றார். கோரிக்கைகள் தொடர்பாக பஸ் நிலையத்தில் அவர் பிரசாரம் செய்தார். அதன்பிறகு அவர் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.


Next Story