எதிரிகளின் சூழ்ச்சி, வஞ்சகத்துக்கு அ.தி.மு.க.வினர் அடிபணிய மாட்டார்கள் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


எதிரிகளின் சூழ்ச்சி, வஞ்சகத்துக்கு அ.தி.மு.க.வினர் அடிபணிய மாட்டார்கள் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 20 Sep 2017 11:00 PM GMT (Updated: 20 Sep 2017 9:20 PM GMT)

எதிரிகளின் சூழ்ச்சி, வஞ்சகத்துக்கு அ.தி.மு.க.வினர் அடிபணிய மாட்டார்கள் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

நாகப்பட்டினம்,

தமிழக மக்களுக்கு எம்.ஜி.ஆர். எதை செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ? அதை வெற்றிகரமாக செய்து காட்டியவர் ஜெயலலிதா. தமிழக மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து கொண்டு, தவ வாழ்க்கை வாழ்ந்து தமிழகத்தை முன்னேற்ற ஜெயலலிதா அரும்பாடுபட்டார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா 13 மாவட்டங்களில் மக்களின் நல்லாதரவோடு வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, 14-வது மாவட்டமாக நாகையில் நடைபெறுகிறது. இதுவரை நடந்து முடிந்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை காட்டிலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தான் இந்த விழா மிகவும் எழுச்சியோடு நடைபெறுகிறது. அண்ணா தனது குடும்பத்துக்கு என்று எதையும் சேர்க்கவில்லை. எம்.ஜி.ஆர். தான் சேர்த்து வைத்த சொத்துக்களை எல்லாம் தமிழக மக்களுக்காக விட்டு சென்றார்.

எம்.ஜி.ஆர். தான் நமக்கு ஜெயலலிதாவை அடையாளம் காட்டினார். அந்த தலைவியின் நல்லாட்சி தான் இன்றும், இப்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது. சமுத்திரம் கூட வற்றி போகலாம். ஆனால் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியும், அவரது திட்டங்களும் வற்றவே வற்றாது. அவர் அள்ளித்தந்த நலத்திட்டங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கும். மாணவர்களுக்கு மடிக்கணினி, பசுமை வீடு திட்டம், முதியோர் உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மும்மதத்தை சேர்ந்தவர்களுக்கும் மானிய உதவித்தொகை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. காவல்துறையின் களங்கத்தை துடைத்து கம்பீரத்தை கொடுத்தது அ.தி.மு.க. ஆட்சி தான். அ.தி.மு.க. ஆட்சியில் நலத்திட்டங்களை பெறாத வீடுகளே இல்லை.

தமிழக மக்களுக்கு வழிகாட்ட எம்.ஜி.ஆர். கொடுத்த அற்புத விளக்கு தான் ஜெயலலிதா. அ.தி.மு.க. ஆட்சி மீது சிலர் கல்வீசுகிறார்கள். அது தமிழக மக்கள் மீது எரியும் கல் என்று மக்கள் கொந்தளிக்கிறார்கள். எம்.ஜி.ஆரை வெல்லமுடியாமலும், ஜெயலலிதாவை வெல்லமுடியாமலும், அவருடைய விசுவாச தொண்டர்களை வெல்ல முடியாமலும் அவர்கள் தவிக்கிறார்கள். ஜெயலலிதாவின் தொண்டர்கள் பூனைகள் அல்ல. பலம் வாய்ந்த யானைகள். எதிரிகளின் சூழ்ச்சிக்கும், வஞ்சகத்துக்கும் அ.தி.மு.க.வினர் அடிபணிய மாட்டார்கள். நம்மை எதிர்ப்பவர்களுக்கு கெட்டபுத்தி, கெட்ட எண்ணம் வந்து விட்டது. எத்தனை துரோகிகள், வஞ்சகர்கள் சேர்ந்தாலும் இந்த ஆட்சியை அசைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story