தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை


தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 20 Sep 2017 10:30 PM GMT (Updated: 20 Sep 2017 9:26 PM GMT)

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க புதுவை கடல் பகுதியில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

பாகூர்,

இந்தியாவில் கடந்த 2008–ம் ஆண்டு கடல் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து 6 மாதத்துக்கு ஒருமுறை கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகிறது.

அதன்படி நேற்று காலை 8 மணி முதல் புதுவை மாநிலத்தின் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை வரை 48 மணி நேரத்துக்கு நடக்கும் இந்த ஒத்திகைக்கு ‘சாகர் கவாச்’ எனப்படும் ‘கடல் கவசம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஒத்திகைக்காக கடலோர காவல்படைக்கு சொந்தமான 2 போர்க்கப்பல்களும் புதுவைக்கு வந்துள்ளன. அவை புதுவை கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த கப்பல்களில் ஏவுகணைகள், அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கப்பல்களில் இருந்து ஹெலிகாப்டர்களில் சென்று வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். போர்க்கப்பல்களில் இருந்து ஹெலிகாப்டர்கள் அடிக்கடி ரோந்து பணிக்கு சென்று வந்ததால் புதுவை கடலோர பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

புதுவை போலீசார், கடலோர பாதுகாப்பு படை மற்றும் கடற்படை ஆகிய பிரிவுகள் இணைந்து இந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபடுகின்றனர். புதுவையின் தெற்கு பகுதியான வீராம்பட்டினம் முதல் மூர்த்திக்குப்பம் வரை உள்ள கடலோர பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகீம் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் ரோந்து படகு மற்றும் மீன்பிடி படகுகள் மூலம் கடலுக்குள் சென்று ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.

பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகணேசன், சப்–இன்ஸ்பெக்டர் தன்வந்திரி மற்றும் கிருமாம்பாக்கம் போலீசார் நரம்பை மீனவர்களுடன் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நடுக்கடலில் கடலூரில் இருந்து புதுவை நோக்கி படகு ஒன்று வந்தது. அதில் 5 பேர் சந்தேகப்படும்படியாக தோள் பைகளுடன் இருந்தனர். அவர்களை நடுக்கடலிலேயே போலீசார் மடக்கி பிடித்து, படகுடன் நரம்பை கடற்கரைக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில் அவர்கள் சென்னை கமாண்டோ படையை சேர்ந்த சப்–இன்ஸ்பெக்டர் கண்ணன், போலீசார் தமிழரசன், துரைசாமி, பிரசாத், பூபேஷ்குமார் என்பதும், இவர்கள் பாதுகாப்பு ஒத்திகைக்காக கடலில் பயணம் செய்ததும் தெரியவந்தது.


Next Story