விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம்


விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம்
x
தினத்தந்தி 20 Sep 2017 11:16 PM GMT (Updated: 20 Sep 2017 11:16 PM GMT)

ஹலகூர் அருகே விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வியாபாரியின் உடல் உறுப்புகளை அவருடைய குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.

ஹலகூர்,

ஹலகூர் அருகே விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வியாபாரியின் உடல் உறுப்புகளை அவருடைய குடும்பத்தினர் தானமாக வழங்கினர். அவர்களுக்கு போலீசாரும், டாக்டர்கள் குழுவினரும் பாராட்டு தெரிவித்தனர்.

மண்டியா மாவட்டம் ஹலகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜு(வயது 64). வியாபாரி. இவர் கடந்த 17–ந் தேதி ஹலகூர் அருகே சென்னப்பட்டணா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த ஒரு வாலிபர், எதிர்பாராத விதமாக நாகராஜுவின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார். இதில் படுகாயம் அடைந்த நாகராஜு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக ஹலகூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் நாகராஜு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதன்பேரில் தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் குழுவினர் நாகராஜுவின் உடலில் இருந்து 2 சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுத்தனர். பின்னர் அவற்றை சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு பொருத்தினர்.

இந்த விபத்து குறித்து ஹலகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விபத்தில் சிக்கி இறந்த வியாபாரியின் உடல் உறுப்புகளை தானம் செய்த அவருடைய குடும்பத்தினரை போலீசாரும், தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் டாக்டர்கள் குழுவினரும் பாராட்டினர்.

Next Story