பா.ஜனதா வெறுப்பு அரசியலை கைவிட வேண்டும்


பா.ஜனதா வெறுப்பு அரசியலை கைவிட வேண்டும்
x
தினத்தந்தி 20 Sep 2017 11:33 PM GMT (Updated: 2017-09-21T05:03:38+05:30)

பா.ஜனதா வெறுப்பு அரசியலை கைவிட வேண்டும் காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் குற்றம்சாட்டினார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலையில் பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜை ராஜினாமா செய்ய வலியுறுத்த பா.ஜனதாவுக்கு அருகதை இல்லை. அவருக்கு எதிராக அந்த கட்சி பழிவாங்கும், வெறுப்பு அரசியலை செய்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி தற்கொலையிலும் அப்போது போலீஸ் மந்திரியாக இருந்த கே.ஜே.ஜார்ஜை ராஜினாமா செய்யுமாறு அந்த கட்சியினர் வலியுறுத்தினர். சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதன் பிறகு கர்நாடக அரசு அந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. இதுபற்றி ஆழமாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், டி.கே.ரவி தற்கொலை செய்து கொண்டார் என்றும், இதில் மந்திரி கே.ஜே.ஜார்ஜிக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தனர். அதே போல் தான் இப்போது கணபதி தற்கொலை வழக்கிலும் பா.ஜனதாவினர் அரசியல் செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சியை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத பா.ஜனதா இவ்வாறு பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறது.

கணபதி தற்கொலையில் சி.பி.ஐ. விசாரணையை நாங்கள் வரவேற்கிறோம். நேர்மையாகவும், நியாயமாகவும் விசாரணை நடைபெற வேண்டும். இந்த வழக்கின் ஆவணங்கள் அடிப்படையில் இதை சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிடவில்லை. கணபதி குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பா.ஜனதாவை சேர்ந்த பல்வேறு தலைவர்கள், மத்திய மந்திரிகள் மீது கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா மீது பல வழக்குகள் இருக்கின்றன. அவர் சிறைக்கும் சென்றார். இத்தகையவர்களுக்கு மந்திரி கே.ஜே.ஜார்ஜ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு என்ன தகுதி உள்ளது?. பா.ஜனதா பழிவாங்கும், வெறுப்பு அரசியலை கைவிட வேண்டும். மாநில வளர்ச்சி குறித்தும், மக்கள் பிரச்சினைகள் குறித்தும் அந்த கட்சி பேச வேண்டும்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.


Next Story