வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ‘கிராவிடாஸ் 17’ சர்வதேச தொழில்நுட்ப திருவிழா


வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ‘கிராவிடாஸ் 17’ சர்வதேச தொழில்நுட்ப திருவிழா
x
தினத்தந்தி 20 Sep 2017 11:49 PM GMT (Updated: 2017-09-21T05:19:27+05:30)

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ‘கிராவிடாஸ் 17’ சர்வதேச அறிவுசார் தொழில்நுட்ப திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

வேலூர்,

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ‘கிராவிடாஸ்’ என்கிற சர்வதேச அறிவுசார் தொழில்நுட்ப திருவிழா நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ‘கிராவிடாஸ் 17’ நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 24–ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. 9–வது ஆண்டாக ‘கிராவிடாஸ்’ திருவிழா நடக்கிறது.

இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ– மாணவிகள் பங்கேற்கின்றனர்.

நிகழ்ச்சியில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பற்றிய கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், ரோபோடிக், ஏரோ மாடலிங், இமேஜ் ரெகனே‌ஷன், ஆர்கிடெக்சுரல் மாடல் மேக்கிங், கோட்–எ–தான், ரோபோ வார்ஸ், பெஸ்ட் அவுட் ஆப் வேஸ்ட் மற்றும் தொழில்நுட்ப போட்டிகள் என 130–க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

மாணவர்களின் திறமைகள், அறிவாற்றல், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் இது நடத்தப்படுகிறது. பல்வேறு போட்டிகளில் சிறந்த மாணவ– மாணவிகளுக்கு பரிசுத்தொகையாக ரூ.10 லட்சம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

இதன் தொடக்க விழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை வி.ஐ.டி. சென்னாரெட்டி அரங்கில் நடக்கிறது. டி.வி.எஸ்.லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஆர்.தினேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திருவிழாவை தொடங்கி வைக்கிறார்.

இஸ்ரோ முன்னாள் இயக்குனரும், கேரள மாநில முதல்–அமைச்சரின் அறிவியல் ஆலோசகருமான பத்மஸ்ரீ எம்.சி.தத்தன் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை வி.ஐ.டி. துணைத்தலைவர்கள், துணை வேந்தர், இணை துணை வேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்து வருவதாக வேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.


Next Story