நீலத்திமிங்கல விளையாட்டில் சிக்கிய பிளஸ்–1 மாணவர் மீட்பு


நீலத்திமிங்கல விளையாட்டில் சிக்கிய பிளஸ்–1 மாணவர் மீட்பு
x
தினத்தந்தி 21 Sep 2017 12:05 AM GMT (Updated: 21 Sep 2017 12:05 AM GMT)

வாணியம்பாடியில் நீலத்திமிங்கல விளையாட்டில் சிக்கிய பிளஸ்–1 மாணவர் மீட்கப்பட்டார்.

வாணியம்பாடி,

வாணியம்பாடி காதர்பேட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 11–ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு வரும்போது மற்ற மாணவர்களை விட மாறுபட்ட நிலையில் நடந்து கொண்டார். சில மாணவர்களிடம் பேசும்போது நீலத்திமிங்கல இணையதள விளையாட்டு குறித்து தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மதியம் காலாண்டு தேர்வு நடந்து கொண்டிருந்த நேரத்தில் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு அந்த மாணவர் சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் வெளிவரவில்லை.

சந்தேகம் அடைந்த ஆசிரியர் அங்கு சென்று பார்த்த போது செல்போன் வைத்துகொண்டு விளையாடிக்கொண்டு இருந்தது தெரியவந்தது. அதனையடுத்து மாணவரை மீட்டு தலைமை ஆசிரியர் ரிஸ்வான்அகமத்திடம் அவர் ஒப்படைத்தார். அந்த மாணவனின் கையில் பிளேடால் அறுத்து நீலதிமிங்கலத்தை வரைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மற்றொரு கையில் பல இடங்களில் பிளேடால் கீறியிருந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டது.

அதைத்தொடர்ந்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். மேலும் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பெற்றோர்களும், போலீசாரும் பள்ளிக்கு விரைந்து சென்று மாணவனுக்கு ஆசிரியர்களுடன் சேர்ந்து கவுன்சிலிங் அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அந்த மாணவர் கூறுகையில் ‘‘நண்பர்களுடன் இணைந்து நீண்ட நாட்களாக இந்த விளையாட்டை விளையாடி வருகிறேன். தினமும் அதிகாலை 4.20 மணி முதல் விளையாடி வருகிறேன்’’ என்றார்,

மேலும் இந்த பள்ளியில் கடந்த 11–ந் தேதி முதல் காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. நேற்று நடந்த அறிவியல் தேர்வு வரையில் மாணவனின் தேர்வு தாள்களில் ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்துவிட்டு மற்ற கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் ‘‘நான் அடுத்த தேர்வை (அரையாண்டு) எழுதமாட்டேன். இதுவே என் கடைசி தேர்வு. விளையாட்டின் இறுதி கட்டத்திற்கு வந்து விட்டேன்’’ என எழுதி உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story