முன் மாதிரி கிராமம்


முன் மாதிரி கிராமம்
x
தினத்தந்தி 29 Sept 2017 10:00 AM IST (Updated: 28 Sept 2017 3:57 PM IST)
t-max-icont-min-icon

‘ஒரு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரே நாளில் 63 கள்ளச்சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா? அப்படியானால் அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறதா?

‘ஒரு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரே நாளில் 63 கள்ளச்சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா? அப்படியானால் அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறதா? இதுநாள் வரை போலீசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அந்த காவல்நிலைய பொறுப்பு அதிகாரியான சப்–இன்ஸ்பெக்டரை உடனடியாக சஸ்பெண்ட் செய்யுங்கள்?.’

தொலைபேசி மூலம் சென்னையில் இருந்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைவர், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வழங்கிய உத்தரவு இது.

இந்தச் சம்பவம் நடந்தது, 1991–ம் ஆண்டு நவம்பர் மாதம்.

துடிப்பும், திறமையும் கொண்ட இளம் ஐ.பி.எஸ். அதிகாரி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சில மாதங்களுக்கு முன்பு தான் பதவியேற்றிருந்தார். அவர் அந்த மாவட்டத்தில் கண்காணிப்பாளராகப் பதவி ஏற்பதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான், நான் கமுதியில் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பொறுப்பு ஏற்றிருந்தேன்.

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைவரின் உத்தரவு தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்னை நேரில் அழைத்து, அந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை செய்தார்.

1991–ம் ஆண்டில் கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்த காவல்நிலையங்களில் ஒன்று சாயல்குடி காவல்நிலையம். தற்பொழுது அந்த காவல்நிலையம் கீழக்கரை காவல் துணைக் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.

கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்ற நான், சாயல்குடி காவல்நிலையம் சென்று, நிலையப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டேன். ஆய்வின் பொழுது உடனிருந்த சாயல்குடி வட்ட காவல் ஆய்வாளரும், சாயல்குடி காவல்நிலைய உதவி ஆய்வாளரும் தங்களது காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் மட்டும் கள்ளச்சாராயம் அதிக அளவில் காய்ச்சப்படுகிறது என்றும், அந்த கரும்புள்ளி கிராம மக்கள் ஒற்றுமையாக இருப்பதால், கள்ளச்சாராய ரெய்டு நடத்த அந்த கிராமத்துக்குப் போலீசாரால் செல்ல முடியவில்லை என்றும் தங்களது இயலாமையை வெளிப்படையாகத் தெரிவித்தனர்.

அந்த கிராமத்திற்கு நேரடியாகச் சென்று, கள்ளச்சாராய ரெய்டு நடத்த நான் திட்டமிட்டேன். அதற்குரிய ஆயத்தப் பணிகளை மேற்கொண்டேன். அந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் சிலரைத் தனித்தனியாக எனது அலுவலகம் வரவழைத்து, உண்மை நிலவரம் குறித்து விசாரணை செய்தேன். தங்களது காவல்நிலையப் பணியில் உள்ள குறைபாடுகள் குறித்து நேரடியாகவும், வெளிப்படையாகவும் அவர்கள் கூறத் தயங்கினாலும், அவர்களது எண்ண ஓட்டத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவை:

*அந்த வட்ட காவல் ஆய்வாளர், அந்த கரும்புள்ளி கிராம சாராய வேட்டையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை.

* காவல்நிலைய பொறுப்பில் இருந்து வரும் உதவி ஆய்வாளர் இளைஞர். போதிய அனுபவம் இல்லாததால், அவரால் தன் கீழ் பணிபுரியும் காவலர்களை ஒருங்கிணைத்து, அந்த கிராமத்தில் கள்ளச்சாராய வேட்டையை   வெற்றிகரமாக நடத்த முடியவில்லை.

* ஒரு சில காவலர்கள் தனிப்பட்ட முறையில் அந்த கரும்புள்ளி கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களிடம் ரகசியத் தொடர்பு வைத்திருந்தனர்.

அந்த காவல்நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஒரு திறமையான காவலரைத் தேர்வு செய்தேன். அந்த கரும்புள்ளி கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபடுபவர்களின் பட்டியல்; கிராமத்தில் அவர்களது வீடு அமைந்துள்ள இடம்; எந்தெந்த இடங்களில் அவர்கள் சாராய ஊறல் போட்டுள்ளனர்; எங்கெங்கு சாராய அடுப்புகள் போடப்பட்டுள்ளன போன்ற தகவல்களை ரகசியமாக சேகரித்து வரும் பணியை அந்த காவலரிடம் ஒப்படைத்தேன். அந்த காவலரின் உறவினர்கள் சிலர், அந்த கிராமத்தில் வசித்து வந்ததால் நான் கொடுத்த பணியை ஒரு வார காலத்திற்குள் அவர் செய்து முடித்தார். அவர் திரட்டிய தகவல்களை ஒரு வரைபடமாக வரைந்து என்னிடம் கொடுத்தார்.

அந்த காவலர் கொடுத்த தகவலின்படி, அக்கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களில் பெரும்பாலான குடும்பத்தினர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதைக் குடும்பத் தொழிலாக, பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர். அந்த கிராமத்திற்குச் செல்ல தார் சாலை இல்லாத காரணத்தால், பஸ் போக்குவரத்து வசதி எதுவுமே இல்லை. இந்த அசவுகரியமானது அவர்களது கள்ளச்சாராய தொழிலுக்குச் சாதகமாக இருந்து வருகிறது என்று தெரியவந்தது.

திரட்டப்பட்ட தகவல்களுடன், கமுதி சிறப்பு ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்ட திறமையான காவலர்களை அழைத்துக் கொண்டு, ஒரு அதிகாலைப் பொழுதில் அந்த கரும்புள்ளி கிராமத்தை நாங்கள் முற்றுகையிட்டோம். எங்களது கள்ளச்சாராய வேட்டை மதியம் வரை நடந்தது. பல நூறு லிட்டர் கள்ளச்சாராயமும், சாராய ஊறலும் அழிக்கப்பட்டது. கிராமத்தை அடுத்துள்ள மலட்டாற்றின் கரையில் போடப்பட்டிருந்த சாராய அடுப்புகள் பல தரைமட்டமாக்கப்பட்டன. சாராயம் காய்ச்சப் பயன்படுத்திய பாத்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள், சாராயம் சேமித்து வைக்கப் பயன்படும் பிளாஸ்டிக் கேன்கள், கார் டியூப்கள் உள்ளிட்டவை அதிக அளவில் கைப்பற்றப்பட்டன.

சாராய வேட்டையின் பொழுது பிடிபட்டவர்களை அந்தக் கிராமத்தில் உள்ள கோவில் முன்பாக வைத்து விசாரணை செய்தோம். அவர்களில் யார் யார் சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்களோ, அவர்கள் மட்டும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது சாயல்குடி காவல்நிலையத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அப்படி கைது செய்யப்பட்ட 31 பெண்கள் உள்பட 63 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த விவரங்களை முழுமையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நான் கூறினேன்.

‘பல ஆண்டுகளாகவே அந்த கிராமத்தில் கள்ளச்  சாராயம் காய்ச்சும் தொழிலில் பலர் ஈடுபட்டு வந்தனர். இதுநாள் வரை அந்தப் பகுதியில் பணிபுரிந்த எந்த போலீஸ் அதிகாரியும் அந்த கிராமத்தில் சாராய ரெய்டு செய்ய தீவிர முயற்சி எடுக்கவில்லை. காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்ற நான் எடுத்த முயற்சியின் விளைவாக கள்ளச்சாராயம் காய்ச்சிய 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவமானது காவல் துறை உயர் அதிகாரிகளைக் கோபப்படச் செய்துள்ளது. எனவே, அந்த காவல்நிலைய பொறுப்பு வகிக்கும் சப்–இன்ஸ்பெக்டரை சஸ்பெண்டு செய்வது முறையாகாது’ என்று தெரியப்படுத்தினேன்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூலமாக கள நிலவரத்தைத் தெரிந்து கொண்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைவர் ஏ.எக்ஸ்.அலெக்சாண்டர், அந்தப் பகுதியில் நிலவிவரும் கள்ளச்சாராய தொழில் குறித்து நேரடியாக விசாரணை செய்ய கமுதி வந்தார். அவரது விசாரணையின் முடிவில், ‘அந்தக் கரும்புள்ளி கிராமத்தினர் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் மீண்டும் ஈடுபடாமல் இருப்பார்களா?’ என்று தனது ஐயப்பாட்டினை வெளிப்படுத்தினார்.

கமுதியைச் சுற்றியுள்ள கிராமங்களை நான் நேரில் பார்வையிட்டு, அந்த மக்களின் மனநிலை, வாழ்க்கை நிலை போன்றவை குறித்து ஓரளவு அறிந்திருந்தேன். அதன் அடிப்படையில், மது விலக்கு அமலாக்கப்பிரிவு தலைவரிடம் கீழ்கண்ட கருத்துகளைத் தெரியப்படுத்தினேன்.

*சாலை மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால், அந்த கிராமமானது தனித் தீவு போல இருந்து வருகிறது.

*அந்த கிராமத்தை அடுத்துள்ள ‘மலட்டாறு’ எப்பொழுதும் வறண்டு இருப்பதால், அந்த கிராமத்தில் விவசாயம் சிறப்பாக நடைபெறவில்லை.

*அந்தப் பகுதியில் தானாகவே வளர்ந்து வரும் வேலிக்கருவேல மரங்களை வெட்டி, கரிமூட்டம் போடுவதுதான் அக்கிராம மக்களின் தொழிலாக இருந்து வருகிறது.

*கரிமூட்டம் போட்ட நேரம் போக, மீதி நாட்களில் கள்ளச்  சாராயம் காய்ச்சும் தொழிலில் பெரும்பாலான மக்கள் தங்கள் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

*சாராயம் காய்ச்சும் அந்த கிராம மக்களை மாற்றுத் தொழிலில் ஈடுபடுத்தி, அவர்களைக் கண்காணிப்பில் வைத்திருந்தால், அவர்கள் சாராயத் தொழிலில் இருந்து விடுபடுவார்கள்.

*கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வரும், அந்த கிராம மக்களுக்கு சாராய வியாபாரிகள் சிலர் பண உதவி செய்து வருகின்றனர். அந்த வியாபாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைவரின் நேரடி விசாரணைக்குப் பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், மாவட்ட கலெக்டரும் இணைந்து ஒரு திட்டம் வகுத்தனர்.

அந்த கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களது திறமைக்கு ஏற்ப, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் வருமானம் தரக்கூடிய தொழில்களைத் தேர்வு செய்து, வங்கி உதவியுடன் மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகள் செய்யத் தொடங்கியது.

இதற்கிடையில் காவல்துறை, வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகியவை ஒருங்கிணைந்து அக்   கிராமத்தில் ஊர் கூட்டத்தைக் கூட்டினர். கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தவர்களும், போலீசில் பிடிபடாமல் சாராயம் காய்ச்சி வந்தவர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். சாராயத் தொழிலுக்கு எதிரான கருத்துடைய, நல்லெண்ணம் கொண்ட அக்கிராம மக்கள் சிலரும் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழிலில் இருந்து விடுபட்டால்தான், அந்தக் கிராமம் வளர்ச்சியடைய முடியும் என்றும், அவர்களது குழந்தைகள் கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேற முடியும் என்றும், அக்கிராம மக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. மேலும் அந்த கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க உள்ளது என்பதையும் தெரியப்படுத்தினோம். அதே சமயம் கள்ளச்சாராயத் தொழிலில் மீண்டும் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் அவர்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டது. பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்ட அந்த கூட்டத்தின் முடிவில், ஊர் மக்கள் அனைவரும் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலைக் கைவிடுவதாக முழு மனதுடன் உறுதியளித்தனர்.

அதைத் தொடர்ந்து, கிராம மறுவாழ்வு திட்டதின் படி 104 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உயர்ந்த ரக கறவை மாடுகள், வண்டி மாடுகள் வாங்கிக் கொடுக்கப்பட்டன. சில குடும்பங்களுக்கு பலசரக்கு கடைகள், சைக்கிள் கடைகள் வைக்கவும், கரிமூட்டம் மற்றும் தச்சுத் தொழில் செய்யவும் ஏற்பாடுகள் செய்து தரப்பட்டன. மேலும் அந்த கிராமத்திற்கு தார் சாலை போடவும், பள்ளிக் கட்டிடம் கட்டவும் போதுமான நிதி ஒதுக்கீட்டை மாவட்ட நிர்வாகம் செய்தது.

மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து எடுத்த முயற்சியால், அந்த கிராம மக்கள் கள்ளச் சாராய தொழிலை முழுமையாக கைவிட்டு விட்டனர். தற்பொழுது அந்த கிராமத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் உயர்கல்வி படித்துள்ளனர். சிலர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த முன் மாதிரி கிராமம் எது என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளீர்களா?. சாயல்குடிக்கு அருகில் உள்ள எம்.கரிசல்குளம் தான் அந்த முன் மாதிரி கிராமம்.

இந்த முயற்சியை முன் மாதிரியாகக் கொண்டு மற்ற மாவட்டங்களிலும் கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டன.

25 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிகளின் விளைவாக, தற்பொழுது தமிழகத்தில்  கள்ளச்சாராம் காய்ச்சும் தொழில் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது.

–விசாரணை தொடரும்.

Next Story