இரிடியம் வாங்கி தருவதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி சென்னையில் 3 பேர் கைது


இரிடியம் வாங்கி தருவதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி சென்னையில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 29 Sept 2017 5:30 AM IST (Updated: 29 Sept 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இரிடியம் வாங்கி தருவதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, 

சென்னை ராயப்பேட்டை பாலாஜி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 45). கவுடியா மடம் சாலையில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் ஆனந்தன் தனக்கு இரிடியம் என்ற உலோகம் தேவைப்படுவதாக சோழிங்கநல்லூர் எழில் நகரில் வசிக்கும் தனது நண்பர் குமாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பள்ளிக்கரணை வி.ஜி.பி. சாந்தி நகரை சேர்ந்த சீனிவாசன் (35), கேரள மாநிலத்தை சேர்ந்த சுஜித் (28) ஆகிய 2 பேரை ஆனந்தனிடம் அறிமுகம் செய்து வைத்து, அவர்களிடம் இரிடியம் வாங்கி தருவதாக குமார் கூறினார். அவர்களிடம் இரிடியம் வாங்குவதற்காக கடந்த 12-ந் தேதி ஆனந்தன் ரூ.80 லட்சம் பணத்தை கொடுத்தார்.

ஆனால் அவர்கள் சொன்னபடி இரிடியத்தை கொடுக்காமல் இருந்து வந்தனர். இதனால் தான் கொடுத்த பணத்தை ஆனந்தன் திருப்பி கேட்டபோது, அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

ரியல் எஸ்டேட் தொழில்

இதுதொடர்பாக ராயப்பேட்டை போலீஸ்நிலையத்தில் ஆனந்தன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, குமார், சுஜித், சீனிவாசன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் ரியஸ் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், விசாரணைக்கு பின்னர் 3 பேரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். 

Next Story