திருத்தணி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு
திருத்தணி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை ஆராய்ச்சி செய்யவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணி,
திருத்தணி-சென்னை சாலையில் சீனிவாசபுரம் அருகே அமைந்துள்ள திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசாமி அரசினர் கலைக்கல்லூரி கடந்த 1977-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
1978-ம் ஆண்டு கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகள் நடுவதற்காக பள்ளம் தோண்டியபோது பல்வேறு இடங்களில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது செப்பு காசுகள், உடைந்த வில், அம்பு, உடைந்த பீங்கான் பாத்திரங்கள் மற்றும் மண்பானைகள் உள்பட பல பொருட்கள் கிடைத்தது.
ஆராய்ச்சி செய்ய கோரிக்கை
அவை அனைத்தும் அப்போதே சென்னையில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சி துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கல்லூரி வளாகத்தின் முன் பகுதியில் உள்ள சைக்கிள் நிறுத்தும் இடத்தின் அருகே கல்லூரியில் பயிலும் வரலாற்றுத்துறை மாணவர்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 3 முதுமக்கள் தாழிகளை கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து கல்லூரி நிர்வாகம் தொல்பொருள் ஆராய்ச்சித்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் இங்கே வந்து ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story