சொத்துக்காக தீர்த்துக்கட்டிய மகள் உள்பட 7 பேர் கைது உடல் நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடியதும் அம்பலம்
பெங்களூருவில், பெண் சாவில் திடீர் திருப்பமாக சொத்துக்காக தீர்த்துக்கட்டியதாக மகள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் உடல் நலக்குறைவால் இறந்ததாக கூறி நாடகமாடியதும் அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு சிக்கஜாலா அருகே வசித்து வந்தவர் சாந்தம்மா (வயது 58). இவரது மகள் சவுபாக்யா (29). இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 31–ந் தேதி திடீரென்று சாந்தம்மா மரணம் அடைந்தார். அவர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டதாக சவுபாக்யா கூறினார். இதனை அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் நம்பி விட்டார்கள். பின்னர் சாந்தம்மாவின் உடலை லட்சுமிபுரா மயானத்தில் வைத்து எரித்தும் விட்டனர். சாந்தம்மா உயிர் இழந்த பின்பு, அவரது மகள் சவுபாக்யாவின் நடவடிக்கையில், அவரது உறவினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் சாந்தம்மா சாவில் மர்மம் இருப்பதாகவும், அவர் உடல் நலக்குறைவால் உயிர் இழந்திருக்க வாய்ப்பில்லை என்றும், இதுபற்றி உரிய விசாரணை நடத்தும்படி கூறி சிக்கஜாலா போலீசில் உறவினர் ஒருவர் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். மேலும் சந்தேகத்தின் பேரில் சாந்தம்மாவின் மகள் சவுபாக்யா, தூரத்து உறவினரான சுப்பிரமணியை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது அவர்கள், சொத்துக்கு ஆசைப்பட்டு சாந்தம்மாவை கொலை செய்தது தெரியவந்தது. அதாவது சாந்தம்மாவின் பெயரில் ஏராளமான சொத்துகள் இருந்ததால், அதனை அடைய சுப்பிரமணி திட்டமிட்டார். இதற்காக சாந்தம்மாவின் ஒரே மகளான சவுபாக்யாவை திருமணம் செய்ய அவர் முடிவு செய்தார். சவுபாக்யா தனது கணவரை விவகாரத்து செய்துவிட்டு தாய் சாந்தம்மாவுடன் வசித்ததால், தனக்கு எப்படியும் திருமணம் செய்து கொடுப்பார் என்று சுப்பிரமணி நம்பினார். பின்னர் சாந்தம்மாவிடம் சென்று சவுபாக்யாவை தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி சுப்பிரமணி கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி தனது உறவினர் சசி என்பவருடன் சேர்ந்து சாந்தம்மாவை முதலில் கொலை செய்ய முயற்சித்தார். ஆனால் முடியாமல் போய்விட்டது. அதே நேரத்தில் சுப்பிரமணியை திருமணம் செய்ய சவுபாக்யா தீர்மானித்தார். மேலும் தனது தாயுடன் உள்ள சொத்துகள் தனக்கு கிடைக்கும் என்றும் கருதியும், சுப்பிரமணியை திருமணம் செய்யவும் பெற்ற தாயையே கொலை செய்ய சவுபாக்யா முடிவு செய்தார். இதற்காக சுப்பிரமணியும், சவுபாக்யாவும் சேர்ந்து கூலிப்படையினருக்கு ரூ.8 லட்சம் கொடுத்துள்ளனர்.
அதன்படி, கடந்த ஜூலை மாதம் 31–ந் தேதி வீட்டில் படுத்திருந்த சாந்தம்மாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு கூலிப்படையினர் தப்பி ஓடிவிட்டார்கள். ஆனால் தனது தாய் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டதாக கூறி சவுபாக்யா நாடகமாடி, அனைவரையும் நம்ப வைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, சிக்கஜாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுபாக்யா, சுப்பிரமணி, சசி, கூலிப்படையை சேர்ந்த நவீன் யாதவ், மஞ்சு ரெட்டி, சந்துரு, சேத்தன்குமார் ஆகிய 7 பேரையும் கைது செய்தார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.