மூதாட்டியை கொன்று தீ வைத்து எரித்த கொடூரம்


மூதாட்டியை கொன்று தீ வைத்து எரித்த கொடூரம்
x
தினத்தந்தி 1 Oct 2017 5:00 AM IST (Updated: 1 Oct 2017 12:43 AM IST)
t-max-icont-min-icon

மூதாட்டியை கொன்று தீ வைத்து எரித்த கொடூரம் மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

உளுந்தூர்பேட்டை,

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆண்டிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மனைவி அஞ்சலை(வயது 75). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். சிதம்பரம் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அஞ்சலை மட்டும் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இவரது 2–வது மகனான ஆறுமுகம் என்பவருடைய மகன் பிரேம்குமார் நேற்று காலை தனது பாட்டி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்ட நிலையில், உள்ளே இருந்து கரும் புகை வந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தார்.

அப்போது அங்கு அஞ்சலை ரத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது உடல் தீ பற்றி எரிந்து கொண்டு இருந்தது. மேலும் வீட்டின் உள்ளே இருந்த பீரோ கதவு உடைக்கப்பட்டு, திறந்த நிலையில் கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு மூதாட்டியை அடித்து கொலை செய்து தீ வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story