கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரியும் கரடிகளை பிடிக்க கூண்டுகள்
கோத்தகிரி அருகே குருக்கத்தி கிராமத்தில் தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரியும் கரடிகளை பிடிக்க வனத்துறை சார்பில் 2 கூண்டுகள் வைக்கப்பட்டன.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே உள்ள குருக்கத்தியில் தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே கடந்த சில வாரங்களாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக தேயிலை பறிக்கும் தொழிலாளர்களும், குடியிருப்பு வாசிகளும் அச்சத்துடன் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் தேயிலை தோட்டத்துக்குள் ஒரு கரடி புகுந்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர். இதைத்தொடர்ந்து அங்குள்ள தேயிலைத்தோட்டத்தில் 3 கரடிகள் சுற்றித்திரிந்தன. இதன் காரணமாக தொழிலாளர்கள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
எனவே தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரியும் கரடிகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து நேற்று கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன், வனக்காப்பாளர்கள் வீரமணி, தருமன் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர் கரடிகள் சுற்றித்திரியும் பகுதியில் கூண்டுகளை வைத்துள்ளனர்.
இது குறித்து வனச்சரகர் சீனிவாசன் கூறும் போது, குருக்கத்தி கிராம பகுதியில் தொடர்ந்து கரடிகள் நடமாட்டம் இருந்து வருவதால் அவற்றை பிடிக்க 2 இடங்களில் தலா ஒரு கூண்டு வீதம் 2 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. கூண்டுக்குள் கரடிகளுக்கு பிடித்த உணவு வகைகள் வைக்கப்பட்டுள்ளன. கரடிகள் கூண்டில் சிக்கினால், அவைகள் பிடிக்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்படும் என்றார்.