விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் ரெயில்வே மேம்பால கட்டுமான பணி மீண்டும் முடக்கம்


விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் ரெயில்வே மேம்பால கட்டுமான பணி மீண்டும் முடக்கம்
x
தினத்தந்தி 1 Oct 2017 3:45 AM IST (Updated: 1 Oct 2017 1:50 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் ரெயில்வே மேம்பால கட்டுமான பணி மீண்டும் முடக்கம் 2 ஆண்டு காலக்கெடுவுக்குள் முடிக்க வாய்ப்பு இல்லை.

விருதுநகர்,

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் பிறதுறைகளின் தாமதத்தால் ரெயில்வே மேம்பால கட்டுமானப்பணி மீண்டும் முடக்கம் அடைந்துள்ளதால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணி முடிவடைய வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள லெவல் கிராசிங்கில் மேம்பாலம்கட்ட பல்வேறு தடைகள் ஏற்பட்ட போதும் மதுரை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவுக்கு பின்னர் கடந்த 4.3.2016 அன்று மேம்பால கட்டுமான பணிக்காக பூமிபூஜை போடப்பட்டது. ரூ.20 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் 8½மீட்டர் அகலத்தில் இந்த மேம்பாலம் வருகிற 2018–ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனாலும் பல்வேறு காரணங்களால் இந்த ரெயில்வே மேம்பால கட்டுமான பணி முழுவீச்சில் நடைபெறாத நிலை இருந்துவந்தது. இதற்கு மணல் தட்டுபாடும் ஒரு காரணமாக கூறப்பட்டது.

மேம்பாலம் கட்டப்படும் ராமமூர்த்தி ரோட்டில் மின்சார வாரியம் மின் கம்பங்களை மாற்றி அமைக்கவும், நகராட்சி நிர்வாகம் குடிநீர் பகிர்மான குழாய்களை மாற்றி அமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் நீண்ட கால தாமதத்துக்கு பின்னர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி மின் கம்பங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் நகரசபை நிர்வாகம் குடிநீர் பகிர்மான குழாய்களை பதிப்பதற்கு டெண்டர்விட்டு ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் குழாய்கள் பதிக்கப்படாமல் ராமமூர்த்தி ரோட்டில் குவித்துவைக்கப்பட்டுள்ள நிலையில் தான் உள்ளது. இந்த பணி தாமதம் ஆவதால் இதனை காரணம் காட்டி மேம்பால கட்டுமான பணியையும் முடக்கி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவித்தப்படி 2018–ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வர வேண்டும். இதற்கிடையில் இப்பகுதியில் அணுகசாலை அமைப்பது குறித்த கருத்து கேட்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்ற போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளனர். இது பற்றியும் ஒரு முடிவு எட்டப்பட வேண்டிய நிலையில் உள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவில் மேம்பாலத்தை கட்டி முடிக்க இன்னும் 5 மாதங்களே உள்ளன. தற்போது உள்ள நிலையில் பணி தொடங்கப்பட்டு 18 மாதங்களுக்கு மேல் ஆகியும் 40 சதவீத பணிகளே முடிவடைந்துள்ள நிலையில் அடுத்து வரும் 5 மாதங்களுக்குள் கட்டுமான பணியை முழுமையாக முடிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. வருகிற 2019–ம் ஆண்டு தொடக்கத்தில் பாராளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்புள்ள நிலையில் அதற்குள்ளாவது மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வருமா? என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேம்பால கட்டுமான பணி முழுவீச்சில் நடைபெற மின்வாரியம், நகரசபை நிர்வாகம் ஆகிய துறைகள் அப்பகுதிகளில் செய்ய வேண்டிய மாற்றி அமைக்கும் பணிகளை உடனடியாக செய்து முடிக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி மேம்பால கட்டுமான பணியையும் விரைவுப்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.


Next Story