செங்குன்றம் அருகே பதுக்கி வைத்து இருந்த 2 ஆயிரம் யூனிட் மணல் பறிமுதல்


செங்குன்றம் அருகே பதுக்கி வைத்து இருந்த 2 ஆயிரம் யூனிட் மணல் பறிமுதல்
x
தினத்தந்தி 1 Oct 2017 4:30 AM IST (Updated: 1 Oct 2017 1:53 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம் அருகே பதுக்கி வைத்து இருந்த 2 ஆயிரம் யூனிட் மணலை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை ரூ.26 லட்சத்துக்கு அதே இடத்தில் விற்பனை செய்தனர்.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் அங்காளஈஸ்வரி அம்மன் கோவில் மைதானத்தில் அதே பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சிலர், மணலை கொண்டுவந்து பதுக்கி, இரவு நேரங்களில் சென்னைக்கு வினியோகம் செய்து வருவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

அவரது உத்தரவின்பேரில் நேற்று காலை பொன்னேரி ஆர்.டி.ஓ. முத்துசாமி, பொன்னேரி தாசில்தார் சுமதி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் அசோகன், சீனிவாச பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.

அங்கு குவியல் குவியலாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மணலை பறிமுதல் செய்து அளவீடு செய்யப்பட்டது.

அதில் 2 ஆயிரம் யூனிட் மணல் இருப்பது தெரிந்தது. பறிமுதல் செய்யப்பட்ட அந்த மணலை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் அரசு நிர்ணயித்த விலையில் ஒரு யூனிட் ரூ.1,300-க்கு அங்கேயே விற்பனை செய்யப்பட்டது.
அவற்றை லாரி உரிமையாளர்கள் உள்பட பலர் பணம் கொடுத்து வாங்கினர்.

பின்னர் 200-க்கும் மேற்பட்ட லாரிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த மணலை அள்ளிச்சென்றனர். இவற்றின் மூலம் பதுக்கி வைத்து இருந்ததாக பறிமுதல் செய்யப்பட்ட மணல் ரூ.26 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
விற்பனையின் போது சோழவரம் வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், பாடியநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி ராமலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க செங்குன்றம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story