வியாசர்பாடியில் வாலிபர் வெட்டிக்கொலை 3 பேர் கைது


வியாசர்பாடியில் வாலிபர் வெட்டிக்கொலை 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 Oct 2017 4:45 AM IST (Updated: 1 Oct 2017 1:56 AM IST)
t-max-icont-min-icon

வியாசர்பாடியில், வாலிபரை வெட்டிக்கொலை செய்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் கணேசன். மாநகர பஸ் டிரைவர். இவருடைய மகன் சுரேஷ் (வயது 22). இவர் மீது திருட்டு, வழிப்பறி, அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் போலீஸ் நிலையங்களில் உள்ளன.

கடந்த 28-ந்தேதி இரவு சுரேஷ், தனது வீட்டில் இருந்தார். அப்போது 8 பேர் கொண்ட கும்பல், கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவரது வீட்டுக்கு வந்தது. வீட்டுக்கு வெளியே நின்றபடி சுரேஷை அழைத்தனர்.

சத்தம் கேட்டு சுரேஷ் வெளியே வந்தார். திடீரென அந்த கும்பல், சுரேஷை அவரது வீட்டுக்கு முன்பாகவே சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் மர்மகும்பல் அவரை விடாமல் துரத்திச்சென்று சரமாரியாக வெட்டியது. உடலில் 8 இடங்களில் வெட்டு விழுந்ததில் பலத்த காயம் அடைந்த சுரேஷ், ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த சென்னை எம்.கே.பி.நகர் போலீசார், கொலையான சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், புளியந்தோப்பு துணை கமிஷனர் ஷியாமளாதேவி உத்தரவின்பேரில் எம்.கே.பி.நகர் உதவி கமிஷனர் அன்பழகன், இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சுரேஷை வெட்டிய மர்மகும்பலில் 3 பேர் மட்டும் அடையாளம் தெரிந்தது.

அதை வைத்து வியாசர்பாடியை சேர்ந்த வல்லரசு, எலிசன்ராஜ், கோபிநாத் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, எதற்காக சுரேஷை வெட்டிக்கொலை செய்தனர்? என விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story