4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த டிரைவர் கைது தேனிலவுக்கு கொடைக்கானல் சென்ற போது சிக்கினார்


4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த டிரைவர் கைது தேனிலவுக்கு கொடைக்கானல் சென்ற போது சிக்கினார்
x
தினத்தந்தி 1 Oct 2017 3:15 AM IST (Updated: 1 Oct 2017 1:56 AM IST)
t-max-icont-min-icon

4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த டிரைவர் தேனிலவுக்காக கொடைக்கானல் சென்ற போது போலீசாரிடம் சிக்கினார்.

கோட்டயம்,

கோட்டயத்தை அடுத்த ஈராட்டுபேட்டையை சேர்ந்தவர் அக்பர் (வயது 29). இவர் தனியார் பஸ் டிரைவராக உள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் காசர்கோடு, முண்டகயம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 2 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தார். 3 பேருடனும், மற்ற திருமணங்களை மறைத்து குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கோட்டயத்தை சேர்ந்த ஒரு பெண்ணை 4–வதாக அவர் திருமணம் செய்தார். அந்த பெண்ணுடன் தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றார். இதற்கிடையே அக்பரின் 3–வது மனைவியின் உறவினர் ஒருவர், அவரை வேறு பெண்ணுடன் கொடைக்கானலில் பார்த்ததாக அவருடைய 3–வது மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அக்பரின் 3–வது மனைவி ஈராட்டுப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது அவர் 4 பெண்களை திருமணம் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொடைக்கானல் சென்ற ஈராட்டுப்பேட்டை போலீசார், கொடைக்கானல் போலீசார் உதவியுடன் விடுதியில் தங்கியிருந்த அக்பரை கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், கைது செய்யப்பட்ட அக்பர் ஏற்கனவே திருமணமானதை மறைத்து மேலும் 3 பெண்களை திருமணம் செய்துள்ளார். 4 பெண்களை திருமணம் செய்ய அவருக்கு யாரேனும் உதவி செய்தார்களா? மேலும் பல பெண்களை அவர் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.


Next Story