மாணவி அனிதா குடும்பத்தினருக்கு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 20 பேருடன் வந்து டி.டி.வி. தினகரன் ஆறுதல்


மாணவி அனிதா குடும்பத்தினருக்கு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 20 பேருடன் வந்து டி.டி.வி. தினகரன் ஆறுதல்
x
தினத்தந்தி 1 Oct 2017 4:45 AM IST (Updated: 1 Oct 2017 3:37 AM IST)
t-max-icont-min-icon

தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 20 பேருடன் அரியலூர் வந்த டி.டி.வி. தினகரன், மாணவி அனிதா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், ரூ.15 லட்சமும் வழங்கினார்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா பிளஸ்-2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றும், ‘நீட்’ தேர்வு காரணமாக மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைக்காததால், கடந்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டங்களும் தமிழகத்தில் நடந்தன. இதற்கிடையே அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்தவகையில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் (அம்மா அணி) டி.டி.வி.தினகரன், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களான செந்தில்பாலாஜி, வெற்றிவேல் உள்பட 20 பேருடன், மாணவி அனிதா வீட்டுக்கு நேற்று திடீரென்று வந்தார். பின்னர் அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், ரூ.15 லட்சம் நிதியையும் வழங்கினார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் டி.டி.வி.தினகரன் கூறுகையில், அனிதா வீட்டுக்கு தொல்.திருமாவளவனுடன் சேர்ந்து வந்ததற்கு அரசியல் காரணங்கள் ஏதுமில்லை. ‘நீட்’ தேர்வு உள்பட தமிழக மக்களுக்கு தேவையில்லாத திட்டங்களை எதிர்ப்பதோடு, பொதுமக்களின் உரிமைகளை காக்கும் அனைத்து திட்டங்களையும் மீட்டெடுக்க அனைத்து கட்சிகளும் இணைந்து போராட முன்வர வேண்டும். ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு என சட்டம் இயற்றும் வரை ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும். மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். எனவே அரசியல் பேச விரும்பவில்லை. ‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஜெயலலிதா உள்பட நாங்களும் போராடினோம். ‘நீட்’ தேர்வு பிரச்சினை தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் சேர்ந்து போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story