டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை கவர்னர் கிரண்பெடி குற்றச்சாட்டு


டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை கவர்னர் கிரண்பெடி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 Oct 2017 4:30 AM IST (Updated: 1 Oct 2017 3:57 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கவர்னர் கிரண்பெடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் ஒவ்வொரு இடமாக சென்று தூய்மை இந்தியா திட்டம் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று காலை கவர்னர் மாளிகையில் இருந்து அவர் சைக்கிளில் புறப்பட்டார். மறைமலை அடிகள் சாலை, இந்திராகாந்தி சிலை, ராஜீவ்காந்தி சிக்னல், வழுதாவூர் சாலை வழியாக குரும்பாபேட் குப்பை கிடங்குக்கு சென்றார். அங்கு அவர் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு மலைபோல் குவித்து வைக்கப்பட்டு இருந்த குப்பைகளை பார்த்து இவை தரமற்று கிடப்பது ஏன்? என்று உள்ளாட்சி துறை அதிகாரிகளிடம் கேட்டார். குப்பைகளின் தன்மை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட கமிட்டியால் மக்களுக்கு கிடைக்கும் பலன் என்ன? என்று கேள்வி எழுப்பினார். மேலும் மாதம் ஒருமுறை இந்த கூட்டத்தை கூட்டி குப்பை கிடங்கை பராமரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதுபோன்ற நடவடிக்கை மேற்கொண்டால் தான் மத்திய அரசிடம் இருந்து குப்பைகளை தரம்பிரித்து கையாளுவதற்காக கூடுதல்நிதியை நாம் கேட்டுப்பெற்று பணிகளை திறம்பட மேற்கொள்ள முடியும் என்று கூறியதுடன் இது தொடர்பாக அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது உள்ளாட்சி துறை இயக்குனர் முகமது மன்சூர், உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த ஆய்வுக்குப் பின்னர் கவர்னர் கிரண்பெடி அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுவையில் குப்பைகளை அகற்றுவதில் இதுவரை திருப்திகரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் குப்பைகளை கையாள மக்கள் மேலும் ஒத்துழைப்பு தர வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து சேகரித்து அதனை எடுக்க வருபவர்களிடம் வழங்க வேண்டும். குப்பைகளை கையாளுவதை மத்திய அரசு திட்டத்தின் கீழ் கொண்டு செல்ல வேண்டும்.

புதுவையில் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு துறைகள் இணைந்து செயல்பட்டால் தான் டெங்கு காய்ச்சல் ஒழிக்க முடியும். அதிகாரிகள் களப்பணியாற்றவும் முன்வர வேண்டும். மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை விவகாரத்தில் கல்வித்துறையும், சுகாதாரத்துறையும் இணைந்து செயல்படவில்லை. இதனால் தான் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். கவர்னர் கிரண்பெடி மேலும் கூறுகையில், மும்பை ரெயில் நிலைய பாலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் பலியான சம்பவம் வருத்தம் அளிக்கிறது. அங்கு புதிதாக பாலம் கட்டுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி கிடைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு அதிகாரிகள் முழு பொறுப்பேற்க வேண்டும்’ என்றார்.


Next Story