புயலை கிளப்பும் மர்மங்கள் விடை கொடுக்குமா விசாரணை கமிஷன்?


புயலை கிளப்பும் மர்மங்கள் விடை கொடுக்குமா விசாரணை கமிஷன்?
x
தினத்தந்தி 1 Oct 2017 10:17 AM IST (Updated: 1 Oct 2017 10:17 AM IST)
t-max-icont-min-icon

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு பிறகு, ‘இரும்பு பெண்மணி’ என்ற பட்டத்தை சுமந்தவர் ஜெயலலிதா.

றைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு பிறகு, ‘இரும்பு பெண்மணி’ என்ற பட்டத்தை சுமந்தவர் ஜெயலலிதா.

அரசியல் களத்தில் சர்வ வல்லமையுடன் வலம் வந்தவர். எதிர்க்கட்சியினருக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர்.

அப்படிப்பட்டவரின் திடீர் மரணம் சந்தேகத்துக்கு இடமானதாகவும், மர்மங்கள் நிறைந்ததாகவும் முடிந்தது வேதனையின் உச்சம்.

கடைக்கோடி தமிழன் மனதையும் இறுக்கும் அந்த மர்ம முடிச்சு மட்டும் ஏனோ இன்றளவும் அவிழ்க்கப்படவில்லை.

கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி, உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு 74 நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர், டிசம்பர் 5-ந் தேதி தமிழகத்தையே கண்ணீர் கடலில் தத்தளிக்கவிட்டு சென்றார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் பிறந்த சந்தேக கணைகள் அரசின் மீது தொடுக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளும், சாமானியனும் ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் புதைந்து இருப்பதாக குற்றம்சாட்டினர். சமூக வலைத்தளங்களிலும் அதே குரல் ஓங்கி ஒலித்தது.

இந்த கேள்விகள் எழுவதற்கான காரணங்கள் அத்தனையும் எளிதில் உதாசீனப்படுத்திவிட முடியாத வகையிலேயே அமைந்திருந்தன.

7½ கோடி மக்களின் பிரதிநிதியாக முதல்-அமைச்சர் அரியணையில் அமர்ந்திருந்த ஜெயலலிதாவை ஆஸ்பத்திரியில் யாரெல்லாம் பார்க்கலாம். யாரெல்லாம் பார்க்கக் கூடாது என்ற முடிவை எடுத்தது யார்? என்பது இன்றுவரை புலப்படவில்லை.

இதுபோல இன்னும் ஏராளமான சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. இவற்றுக்கு விடைகாண நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

இதற்கிடையே மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘ஜெயலலிதாவின் நோய்க்கு மருந்து கொடுக்காமல் மருத்துவமனையில் சேர்த்தனர். ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார். சட்னி சாப்பிட்டார் என்று நாங்கள் பொய் சொன்னோம். ஆனால் நாங்கள் யாரும் அவரை பார்க்கவில்லை. சசிகலாவும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ஜெயலலிதாவை பார்த்தனர். சசிகலாவுக்கு பயந்துதான் நாங்கள் பொய் சொன்னோம்’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதே வேளையில், ‘அக்டோபர் 1-ந் தேதிக்கு பிறகு சசிகலாவே ஜெயலலிதாவை பார்க்கவில்லை’ என தெரிவித்துள்ள டி.டி.வி.தினகரன், ஜெயலலிதா சிகிச்சையின்போது நைட்டி உடையில் இருப்பது போன்ற வீடியோவை சசிகலா எடுத்து இருக்கிறார் என்றும் கூறி உள்ளார்.

திருமணம், பிறந்தநாள் போன்ற சுப நிகழ்ச்சிகளின் போதும், சுற்றுலா செல்லும்போதும் அந்த இனிமையான காட்சிகளை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு, பின்னர் அவ்வப்போது அதனைப் பார்த்து மகிழ்ச்சி அடைவது உண்டு.

ஆனால், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ஒருவரை, அவருடன் நெருக்கமாக இருந்தவர் வீடியோவாக எடுத்து வைத்து இருக்கிறார் என்ற அதிர்ச்சிகரமான தகவலை இப்போது தான் கேள்விப்பட நேர்ந்து இருக்கிறது.

ஜெயலலிதா சிகிச்சை பெறும் காட்சிகளை சசிகலா வீடியோவாக எடுத்து வைத்து இருக்கிறார் என்றும், தேவைப்படும் நேரத்தில் அது வெளியிடப்படும் என்றும் டி.டி.வி.தினகரன் கூறி இருந்தாலும் அப்படிப்பட்ட வீடியோவை எடுக்க வேண்டிய அவசியம் சசிகலாவுக்கு ஏற்பட்டது ஏன் என்பதற்கு அவர் விளக்கம் கூறவில்லை.

இதற்கிடையே, ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது எந்த நிலையில் இருந்தார் என்பது தொடர்பாக வெளியான ஆஸ்பத்திரி அறிக்கை இன்னும் பல சந்தேகங்களுக்கு வித்திட்டு இருக் கிறது.

அவரது உடலில் சர்க்கரை அளவு அபாயகரமான நிலைக்கு செல்லும் வரை உடன் இருந்தவர்கள் அதுபற்றி அக்கறை செலுத்தாதது ஏன் என்பது விளங்கவில்லை.

இதுபோன்று புயலை கிளப்பிக்கொண்டு இருக்கும் மர்மங்களுக்கு எல்லாம் இப்போது நியமித்துள்ள விசாரணை கமிஷன், விடை கொடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.

-தமிழ்நாடன், திண்டுக்கல் 

Next Story