உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 1 Oct 2017 5:00 PM IST (Updated: 1 Oct 2017 1:25 PM IST)
t-max-icont-min-icon

மலைப்பகுதி ஒன்றின் அருகில் இருக்கும் சிறிய நகரம் அது. அந்த பகுதி இன்னும் மக்களை அதிகம் கவராததால் குறிப்பிட்ட அளவே சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

லைப்பகுதி ஒன்றின் அருகில் இருக்கும் சிறிய நகரம் அது. அந்த பகுதி இன்னும் மக்களை அதிகம் கவராததால் குறிப்பிட்ட அளவே சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். நாலைந்து சிறிய ‘லாட்ஜ்’கள் அங்கு உள்ளன. அவைகளில் கட்டணமும் குறைவுதான்.

ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அன்று திடீரென்று அந்த லாட்ஜ் களில் மதிய நேரத்தில் போலீஸ் ‘ரெய்டு’ நடந்தது. எட்டு ஜோடிகளை போலீசார் பிடித்தனர். அவர்களில் யாரும் கணவன்- மனைவி இல்லை.

ஆண்களோடு பிடிபட்ட பெண்களை விசாரித்த போலீசுக்கு அதிர்ச்சி. எட்டு பெண்களுமே குடும்பத்தலைவிகள். ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தவர்கள். தினமும் அந்த லாட்ஜ்களுக்கு வருவதாகவும், ஒன்று அல்லது இரண்டு வாடிக்கையாளர்களை சந்தித்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிடுவதாகவும் கூறினார்கள்.

அவர்கள் எப்படி அந்த நிலைக்கு ஆளானார்கள் என்பது அதிர்ச்சிதரத்தக்க விஷயம்.

பிடிபட்ட பெண்களில் ஒருவர் தந்த வாக்குமூலத்தை படியுங்கள்:

“நானும், என் கணவரும் மலைப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் எடுபிடி வேலை செய்துவந்தோம். ஆறு மாதத்திற்கு முன்பு ஒருநாள் எனது வீட்டுக்காரரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், ‘நாங்கள் சமையல் அறை கருவிகளை தயார் செய்யும் புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கி யிருக்கிறோம். அதை விளம்பரப்படுத்துவதற்காக ஒவ்வொரு ஊரிலும் குறிப்பிட்ட சிலரை அழைத்து பரிசு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதில் உங்கள் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. நீங்களும், உங்கள் மனைவியும் சேர்ந்து வந்து பரிசினை வாங்கிச் செல்லுங்கள்’ என்று அழைத்தார்கள். கணவரும் ரொம்ப ஆசையோடு என்னையும் அழைத்துக் கொண்டு, குறிப்பிட்ட அந்த விலாசத்திற்கு சென்றார்.

அங்கு என்னையும், என் கணவரையும் தனித்தனி அறைகளில் உட்கார வைத்தனர். என்னிடம் ஒரு பெண்ணும், என் கணவரிடம் ஒரு ஆணும் பேசினார்கள். என்னிடம் பேசிய பெண் ரொம்ப உரிமை எடுத்துக் கொண்டு, நட்புரீதியாக ரொம்ப நேரம் பேசினார். அவர் காட்டிய நெருக்கத்தில் நான் தன்னிலை மறந்து என் கணவருக்குக்கூட தெரியாத என் வாழ்க்கை ரகசியங்களை எல்லாம் கூறிவிட்டேன். என் முந்தைய காதல் ரகசியம், இப்போது என் கணவருக்கும்- எனக்கும் இருக்கும் உறவு சிக்கல்கள், கணவரின் மதுப்பழக்கம், குடும்ப பண நெருக்கடி எல்லாவற்றையும் கொட்டிவிட்டேன். என் செல்போன் நம்பரையும் கொடுத்தேன். நான் அந்த பெண்ணிடம் பேசியது போன்று, என் கணவர் அந்த ஆணிடம் நிறைய பேசியிருக்கிறார். என் கணவருக்கு வெளிநாட்டு மதுவும் வழங்கியிருக்கிறார்கள். பின்பு இருவருக்கும் நல்ல சாப்பாடு கொடுத்து, பரிசுப் பொருள் ஒன்றையும் வழங்கி, எங்களை காரில் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.

இரண்டு நாட்கள் கழித்து அந்த பெண் என்னிடம் பேசி, தனியாக வந்து சந்திக்கும்படி அழைத்தார். நானும் சென்றேன். என்னை ரொம்ப பிடித்திருப்பதாகக் கூறி, தன்னோடு வெளியே காரில் அழைத்துச்சென்றார். எனக்கு சுடிதார் நன்றாக இருக்கும் என்று கூறி, வாங்கித் தந்து அணியச் செய்தார். என்னை பியூட்டி பார்லருக்கும் அழைத்துச் சென்றார். செலவுக்கும் பணம் தந்தார். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக என்னை தன்வசப்படுத்தி விட்டார்.

என் கணவரோடு முதல் நாள் பேசிய நபரும், அவ்வப்போது என் கணவரை தனியாக அழைத்து மது விருந்து நடத்தியிருக்கிறார். அது எனக்கு தெரியாது. சில மாதங்களில், அந்த நபரால் என் கணவர் முழு குடிகாரராகி விட்டார். அவர் வேலைக்கு செல்லவில்லை. அதனால் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது.

இப்படி ஒரு சூழ்நிலையில் நான் அந்த பெண்ணிடம் சென்று, ‘வாழ்வாதாரத்துக்கு வழியில்லை. ஏதாவது ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கேட்டுக்கொண்டேன். பணம் கொடுத்து, பல வழிகளில் என்னை சிக்கவைத்து, இறுதியில் இந்த தொழிலில் இறக்கிவிட்டுவிட்டாள். என்னைப் போல்தான் மற்ற பெண்களும் அவளிடம் சிக்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் ‘இப்படிப்பட்ட பெண்கள்’ என்று வெளியே தெரிந்தால், குடும்ப கவுரவம் பாதிக்கப்பட்டு எங்கள் பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும். இனிமேல் இந்த தொழிலுக்கே வரமாட்டோம். எங்களை விட்டுவிடுங்கள்’ என்று கூறி போலீசாரை கையெடுத்து கும்பிட்டிருக்கிறார்கள்.

பரிசு ஆசைகாட்டி ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து எட்டு ஏழைப் பெண்களை கவர்ந்து, அவர்களது குடும்பத்தோடு விளையாடி, அவர்களை தடம் புரளவைத்திருக்கிறார்கள்.

‘இலவசமாக பரிசு தருகிறோம்’ என்று உங்களை யாராவது அழைத்தால், இந்த சம்பவத்தை கொஞ்சம் நினைச்சுப்பார்த்துக்குங்க!

- உஷாரு வரும். 

Next Story