தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளை முறியடிப்போம்: தா.பாண்டியன் பேட்டி


தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளை முறியடிப்போம்: தா.பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 2 Oct 2017 5:15 AM IST (Updated: 2 Oct 2017 12:10 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளை முறியடிப்போம் என்று விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தா.பாண்டியன் கூறினார்.

விழுப்புரம்,

விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தா.பாண்டியன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மறைந்த நடிகர் சிவாஜிக்கு சிலை அமைத்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அவர் எழுதிய வசனத்தால்தான் சிவாஜிகணேசனுக்கு திரையுலகில் பெருமை. கருணாநிதியின் பெயரை, சிவாஜி சிலையில் இருந்து நீக்கியது தரம்கெட்ட அரசியல்.

தமிழகத்தில் உள்ள ஆறுகளில் தடுப்பணைகள் இல்லாததால் மழைநீர் வெள்ளமாக கடலில்போய் கலக்கிறது. வறட்சியில் வாடிப்போன மாநிலம், பெய்கிற மழையை பாதுகாக்க தெரியாத இந்த அரசை கண்டிக்கிறோம். இந்த தமிழக அரசு, தானாக முன்வந்து விலக வேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற 3–ந்தேதி (நாளை) தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசில், கடந்த 3 மாதங்களில் சமையல் கியாஸ் விலை ரூ.110 உயர்ந்துள்ளது. பெட்ரோல்– டீசல் விலை 8 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. இந்த ஆட்சியில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. எந்த விலையும் குறைக்கப்படவில்லை. போதாக்குறைக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையால் எந்த நாட்டிலும் இல்லாத வகையில், இந்தியா ஒன்றில்தான் சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட பின்பும் வரி போடப்பட்டுள்ளது. சமையல் பாத்திரங்கள் மீதும் வரிபோடுகிறார்கள். இது ஒரு மக்கள் விரோத அரசு.

ரெயில் சேவை தொடங்கி 140 ஆண்டுகளாக ஏறி, இறங்கும் ரெயில்வே மேம்பாலம் கூட சரிவர போடத்தெரியாத இந்த அரசு, ரூ.1 லட்சம் கோடியில் புல்லட் ரெயில் விடுகிறேன் என்பது புல்லட் பொய். இந்த புல்லட் ரெயில் தேவையே இல்லை. ஜப்பான் முதலாளிகளும், இந்திய முதலாளிகளும் பயனடையவே இது போடப்படுகிறது.

வருகிற 2019–ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பா.ஜ.க. வெற்றியை தடுக்காவிட்டால் இந்திய நாடே நிலைக்காது. நாடு சிதறிப்போகும். இது இறுதிப்போர். தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜ.க.வை முறியடிக்க மற்ற அரசியல் கட்சியினரை விட மக்கள் விழிப்புணர்வுடன் தயாராக இருக்கிறார்கள். தி.மு.க.வை முறியடிப்பதுதான் அ.தி.மு.க.வுக்கு வேலை. அ.தி.மு.க.வை முறியடிப்பதுதான் தி.மு.க.வின் வேலை என இருந்து கொண்டு பா.ஜ.க.வை முடியறிப்பது இல்லை என்றால், அவர்களோடு கூட்டணி இல்லை. பிற ஜனநாயக கட்சிகளோடு நாங்கள் சேருவோம். பா.ஜ.க.வுடன் கூட்டணி சேருபவர்கள், அரசியலில் உடன்கட்டை ஏறுவதற்கு சமம். அதோடு அவர்களது வரலாறும் முடியும்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக டெல்லி, இதில் தலையிடுவதை எந்த விதத்திலும் நாங்கள் ஏற்கவில்லை. எம்.ஜி.ஆர். இருந்தபோது அ.தி.மு.க. எப்படி இருந்ததோ? அந்த அ.தி.மு.க. இப்போது இல்லை. நடிகர் கமலின் அரசியல் கொள்கை என்ன? அவர் அரசியலில் இறங்குவாரா? இல்லையா? என்பதை முதலில் தெளிவுப்படுத்த வேண்டும். அவர் அடுத்த படத்தில் நடிப்பது என்பதுதான் உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story