நண்பர்களுடன் வெளியே சென்றவர் தோட்டத்தில் பிணமாக கிடந்தார் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
கடையநல்லூர் அருகே, நண்பர்களுடன் வெளியே சென்றவர் தோட்டத்தில் பிணமாக கிடந்தார். இதனால் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடையநல்லூர்,
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள செவல்விளையை சேர்ந்தவர், முப்பிடாதி மகன் கருப்பசாமி (வயது 32). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக சொந்த ஊருக்கு வந்தார். அதன் பின்னர் அவர் வெளிநாட்டுக்கு செல்லவில்லை. இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 29–ந் தேதி இரவு, நண்பர்களுடன் வெளியே சென்று விட்டு வருவதாக வீட்டில் உள்ளவர்களுடன் கூறி, வெளியே சென்றார். நேற்று முன்தினம் காலையில் வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடினர்.
அதன் பின்னர் கல்லார் ஆற்றின் அருகே உள்ள தோட்டத்தில் கருப்பசாமி பிணமாக கிடப்பதாக, குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்றனர். அங்கு அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.
மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீசாரும் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று மாலை கருப்பசாமியின் உடல், பிரேத பரிசோதனை முடிந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட இருந்தது. அப்போது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். கருப்பசாமியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில், கருப்பசாமி மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட யாரேனும் மீது சந்தேகம் இருந்தால் புகார் மனு எழுதித் தாருங்கள். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து, தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதனை தொடர்ந்து கருப்பசாமியின் உடலை பெற்றுச் சென்றனர்.