போலீஸ் நிலையத்தில் ஆம்னி பஸ்சை ஒப்படைத்த டிரைவர் சம்பள பாக்கி இருப்பதாக புகார்
சம்பள பாக்கி இருப்பதாக கூறி ஆம்னி பஸ்சை அதன் டிரைவர் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
நெல்லை,
நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்வதற்காக ஒரு ஆம்னி பஸ் நேற்று முன்தினம் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் வந்தது. அந்த பஸ் திடீரென்று மாயமானது. அந்த பஸ்சின் டிரைவர், மாற்று டிரைவரும் மாயமாகினர்.
இதுகுறித்து பஸ்சின் உரிமையாளர், நாகர்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். நெல்லை மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. சோதனை சாவடிகளிலும் வாகன சோதனை தீவிரமாக நடந்தது.
இதற்கிடையே, அந்த ஆம்னி பஸ்சை அதன் டிரைவர் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அப்போது அவர் கூறும்போது, “எனக்கும், மாற்று டிரைவருக்கும் சம்பள பாக்கி இருக்கிறது. மேலும் பஸ்சை பழுது பார்க்கும் இடத்திலும் பாக்கி இருக்கிறது. சம்பள பாக்கி பற்றி கேட்டால், பஸ் உரிமையாளர் சரியாக பதில் சொல்வது இல்லை. எங்களது சம்பள பாக்கி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.
இதைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள், ஆம்னி பஸ் உரிமையாளரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர் சம்பள பாக்கியை கொடுப்பதாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து டிரைவரும், மாற்று டிரைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.