நிதி நிறுவன உரிமையாளரை கைது செய்யக்கோரி வாடிக்கையாளர்கள்– பா.ஜனதாவினர் சாலை மறியல்


நிதி நிறுவன உரிமையாளரை கைது செய்யக்கோரி வாடிக்கையாளர்கள்– பா.ஜனதாவினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Oct 2017 4:30 AM IST (Updated: 2 Oct 2017 12:14 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே பல கோடி ரூபாய் மோசடி செய்த நிதிநிறுவன உரிமையாளரை கைது செய்ய கோரி வாடிக்கையாளர்கள், பா.ஜனதாவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே மத்தம்பாலையில் ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் பலகோடி ரூபாய் முதலீடு செய்தனர். இந்த நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதை அறிந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  

தொடர்ந்து, தங்களது பணத்தை திரும்ப தர வேண்டும், மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன உரிமையாளரை கைது செய்ய வேண்டும்  ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல், முற்றுகை என பல கட்ட போராட்டங்கள் நடத்தினர்.  இதுதொடர்பாக நாகர்கோவிலில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஏராளமானோர் புகார் கொடுத்தனர். அவர்களின் புகார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நிதி நிறுவன பங்குதாரர்கள் 2 பேரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே மத்தம்பாலையில் நிதி நிறுவனம் முன் கேரளா மற்றும் குமரி மாவட்ட வாடிக்கையாளர்கள் தொடர் சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போராட்டத்தில் நேற்றுமுன்தினம் நிதி நிறுவனம் முன் கஞ்சி காய்ச்சும் போராட்டமும் நடந்தது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் திடீரென மத்தம்பாலையில் உள்ள நிதி நிறுவன உரிமையாளரின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு சென்றனர். அங்கு நிதி நிறுவன உரிமையாளர் காம்பவுண்டு கதவை (கேட்) உடைத்து உள்ளே சென்றனர். சிலர் வீட்டின் கண்ணாடி, கதவுகளை கல்வீசி உடைத்தனர். இதுகுறித்து தகவல்  அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் நிதி நிறுவன உரிமையாளரை கைது செய்ய கோரி வாடிக்கையாளர்கள் மற்றும்  பா.ஜனதா சார்பில் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை காரக்கோணத்தில் இருந்து மத்தம்பாலை நோக்கி ஏராளமானோர் ஊர்வலமாக புறப்பட்டனர். இதில், குமரி, கேரள பா.ஜனதாவை சேர்ந்தவர்களும், வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் நிதி நிறுவனத்தின் அருகில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், போராட்டக்காரர்கள் அதை ஏற்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.

  நீண்ட நேரத்திற்கு பிறகு போராட்டக்காரர்கள் மறியலை கைவிட்டனர். மேலும், தங்களது பணத்தை திருப்பி கொடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று வாடிக்கையாளர்கள் அறிவித்துள்ளனர்.


Related Tags :
Next Story