பெண்ணாடம் அருகே மாட்டுவண்டிகளை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டம்
பெண்ணாடம் அருகே மாட்டுவண்டிகளை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் அருகே செம்பேரியில் உள்ள வெள்ளாற்றில் இருந்து உரிய அனுமதி இல்லாமல் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் தண்ணீர் தட்டுபாடும் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் விவசாய பணிகளும் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று 15–க்கும் மேற்பட்டவர்கள் தங்களது மாட்டுவண்டிகள் மூலம் செம்பேரி வெள்ளாற்றில் மணல் அள்ள சென்றனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் 30–க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு அந்த மாட்டுவண்டிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவலின் பேரில் பெண்ணாடம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமாதானபடுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாட்டு வண்டி உரிமையாளர்களிடம் இனி இது போன்று உரிய அனுமதி இல்லாமல் மணல் அள்ளக்கூடாது. இதை மீறி மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்து அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.