கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு பயிற்சி அளித்து ஓட்டுனர் உரிமம் எடுத்து தரப்படும்


கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு பயிற்சி அளித்து ஓட்டுனர் உரிமம் எடுத்து தரப்படும்
x
தினத்தந்தி 2 Oct 2017 4:00 AM IST (Updated: 2 Oct 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

‘கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு பயிற்சி அளித்து ஓட்டுனர் உரிமம் எடுத்து தரப்படும்’ என்று சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

கோவை,

கோவை மத்திய சிறை வளாகத்தில் ஈஷா யோகா மையம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதற்கு தமிழக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டார், பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கோவை மத்திய சிறையில் ஆயிரத்து 700 கைதிகள் உள்ளனர். இங்கு தேக்கு, ஈட்டி உள்பட 6 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு உள்ளோம். அதுமட்டுமல்லாமல் பழ மரங்களும் நட்டுள்ளோம். இவை சிறை கைதிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். சென்னையில் உள்ள சிறை கைதிகள் 300 பேருக்கு லாரி ஓட்டுவதற்கு பயிற்சி அளித்து உரிமம் எடுத்துக் கொடுத்துள்ளோம்.

அது போல கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகள் 100 பேருக்கு ஒரு பிரிவுக்கு 10 பேர் வீதம் 10 பிரிவில் 100 கைதிகளுக்கு ஜி.டி.நாயுடு பயிற்சி மையம் மூலம் லாரி உள்பட கனரக வாகனங்கள் ஓட்ட பயிற்சி அளித்து ஓட்டுனர் உரிமம் எடுத்துக் கொடுக்க உள்ளோம்.

அதன்படி ஒரு ஆண்டுக்கு 300 கைதிகளுக்கு ஓட்டுனர் உரிமம், வெல்டிங், கணினி பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு பயிற்சி பெற்று சிறையிலிருந்து வெளியே செல்பவர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்கும் வகையில் அவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்படும்.

இதுதவிர சிறைத் துறை டிரைவர்கள் பல பேர் ஏற்கனவே ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு, பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுவது எப்படி? பழுது பார்ப்பது எப்படி என்ற பற்றியும் பயிற்சி அளிக்கப்படும்.

தமிழக சிறை பாதுகாப்புக்கு சி.ஆர்.பி.எப். போலீசார் ஏற்கனவே பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள னர். இதுதவிர மேலும் ஆயிரம் சிறை காவலர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அடுத்த மாதம்(நவம்பர்) பணியில் சேர்ந்த பின்னர் சிறைகளின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும்.

விமான நிலையங்களில் சோதனை செய்ய உதவும் கருவிகளை போன்று நவீன கருவிகள் சிறைகளில் விரைவில் அமைக்கப்படும். சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்தாமல் இருப்பதற்காக செல்போன் ஜாமர் கருவிகள் பொருத்தப்படும்.

சிறைக்கு வரும் கைதிகள் வயதானவர்களாக தான் இருக்கிறார்கள். 80 வயதிலும் கைதாகி சிறைக்கு வருகிறார்கள். அவர்கள் சிறைக்கு வரும்போதே நெஞ்சு வலி, நீரிழிவு உள்பட பல்வேறு நோய்கள் உள்ளன. அவர்களின் இறப்பை எந்த அளவு குறைக்க முடியுமோ அந்த அளவு குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறைக்குள்ளேயே ஆஸ்பத்திரி உள்ளது. அதில் 2 டாக்டர்கள், 2 மனநல மருத்துவர்கள் மற்றும் கவுன்சிலிங் மருத்துவர்கள் உள்ளனர்.

கைதிகள் உடல்நலம் குன்றினால் உடனடியாக அழைத்து செல்ல அனைத்து சிறைகளிலும் ஆம்புலன்ஸ்கள் ஏற்கனவே உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. அறிவுடைநம்பி, கோவை சிறை சூப்பிரண்டு செந்தில்குமார், கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரி அறங்காவலர் தவமணி பழனிசாமி, ஈஷா யோகா மைய அமைப்பினர் மற்றும் சிறைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story